[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்காக முதல்வர் மீது பொய் பரப்புரை செய்தால் மக்கள் பாடம் புகட்டுவர்; அரசியல் காழ்ப்புணர்வால் கோடநாடு விவகாரத்தில் பொய் புகார் பரப்பப்படுகிறது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுனரிடம் ஸ்டாலின் குற்றம்சாட்டியது அரசியல் ஆதாயத்துக்காகத்தான் - கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் என்ன?; என் வலிமை எனக்கு தெரியும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
  • BREAKING-NEWS சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.பி.க்கள் ஜெயவர்தன், வைத்திலிங்கம் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அறிவிப்பு

தொடரும் தலித் செயற்பாட்டாளர்கள் கைது : என்ன நடக்கிறது மகராஷ்டிராவில் ?

the-battle-against-the-dalits-against-the-bjp

மகாராஷ்டிராவில் ஆட்சி நடத்தும் பாஜக அரசு அந்த மாநிலத்திலுள்ள தலித் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மிகப்பெரிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த வாரத்தில் முக்கியமான ஐந்து தலித் செயற்பாட்டாளர்கள் மாவோயிஸ்ட்டுகளோடு தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA)  கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையை மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியுசிஎல்) ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் முதலான மனித உரிமை அமைப்புகளும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன.

கைது செய்யப்பட்டிருப்பவர்கள் யார், யார்?

மகாராஷ்டிர அரசால் கைது செய்யப்பட்டிருக்கும் சுரேந்திரா காட்லிங் புகழ்பெற்ற மனித உரிமை வழக்கறிஞராவார். அவர் இந்திய மக்கள் வழக்கறிஞர்களின் கூட்டமைப்புக்கு செயலாளராகவும் இருந்து வருகிறார். 1997ல் மும்பை, ராமாபய் காலனி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்துகொண்ட கவிஞர் விலாஸ் கோக்ரேவுடன் இணைந்து 1980களில் ‘ஆவ்ஹான் நாட்ய மஞ்ச்’ என்ற அமைப்பை நிறுவி மும்பையின் வீதிகளில் நாடகங்களை நடத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். 

‘அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி’யின் உறுப்பினராக இருக்கும் ரோனா வில்சன் கேரளாவில் பிறந்து டெல்லியில் வசிப்பவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே மனித உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவந்த அவர், தனது பிஎச்டி ஆய்வுக்காக லண்டனுக்குச் செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மராத்தியில் வெளிவரும் ‘வித்ரோஹி’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுதிர் தவாலே, நாக்பூரில் பிறந்தவர். பீமா கோரேகான் நினைவு தினத்தையொட்டி இருநூறுக்கும் மேற்பட்ட தலித் அமைப்புகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய எழுச்சி ஏற்பட பாடுபட்டவர். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில துறையில் உதவிப் பேராசிரியையாக இருக்கும் ஷோமா சென் இன்னும் சில நாட்களில் பணி ஓய்வு பெற இருந்தார். பெண்ணியவாதியாகவும், மனித உரிமை ஆர்வலராகவும் அறியப்பட்ட ஷோமா சென்னுக்கும் பீமா கோரேகான் நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் அவரை மகாராஷ்டிரா அரசு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டிருப்பவர்களில் இன்னொருவரான மகேஷ் ராவத் ஆதிவாசி மக்களின் நில உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்து வருபவர். அவருக்கும் பீமா கோரேகான் நிகழ்வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  

பீமா கோரேகான் நினைவுநாள் :

மஹர்கள் இடம்பெற்ற பிரிட்டிஷ் படை, பேஷ்வாக்களின் படையை வெற்றிகொண்ட 1818 ஆம் ஆண்டு யுத்தத்தின் 200 ஆவது ஆண்டை நினைவுகூறுவதற்கு அந்த யுத்தம் நடந்த பீமா கோரேகான் கிராமத்தில் 2018 ஜனவரி 1 ஆம் தேதி லட்சக்கணக்கில் தலித்துகள் கூடினார்கள். அவ்வாறு கூடிய தலித்துகள் மீது வகுப்புவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து வெகுண்டெழுந்த தலித்துகள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை  அறிவித்ததால் மகாராஷ்டிராவே  ஸ்தம்பித்தது. அந்தப் போராட்டத்தின் வெற்றியைக் கண்டு திகைத்துப்போன பாஜக அரசு அத்துடன் தொடர்புபடுத்தி மகராஷ்டிராவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் அடக்கி ஒடுக்க முற்பட்டுள்ளது.  

கலவரத்துக்குக் காரணமான இருவர்:

பீமா கோரேகான் நினைவு நாளின்போது கூடிய தலித் மக்கள்மீது தாக்குதல் நடத்தியதாக மிலிந்த் ஏக்போடே என்பவர் மீதும், சம்பாஜி பிடே என்பவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்து ஏக்தா ஆகாதி என்ற அமைப்பின் தலைவரான மிலிந்த் ஏக்போடே உச்சநீதிமன்றம் வரை சென்று முன் ஜாமீன் பெறுவதற்கு முயற்சித்தார். ஆனால் கிடைக்கவில்லை. அவரைக் கைதுசெய்யுமாறு தலித் அமைப்புகள் வலியுறுத்திப் போராட்டங்களை நடத்தின. அதன் பின்னரே அவரை மகாராஷ்டிர காவல்துறை கைது செய்தது. ஆனால் உடனடியாகவே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.  

ஷிவ் ப்ரதிஸ்தான் என்ற அமைப்பின் தலைவரான சம்பாஜி பிடே வெறுப்புப் பேச்சுகளால் பிரபலமடைந்தவர். “எனது தோட்டத்தில் விளையும் மாம்பழங்களை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும். இதுவரை 150 பேருக்கு அப்படி குழந்தை பிறந்துள்ளது” என இரண்டொரு நாட்களுக்கு முன்னால் அவர் பேசியது கேலிக்கும் விமர்சனத்துக்கும் காரணமாகியுள்ளது. மூட நம்பிக்கைகளைப் பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டின்கீழ் அவர்மீது சட்டரீதியாக  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பலரும் வற்புறுத்தி வருகின்றனர். பீமா கோரேகானில் தலித் மக்கள்மீது வன்முறையை ஏவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் அவர் முன் ஜாமீன் பெற முயற்சித்தார். ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் அவரை இதுவரை போலீஸ் கைது செய்யவில்லை.

மத்தியில் உள்ள பாஜக அரசில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சித் தலைவர்  ராம்தாஸ் அத்வாலே கடந்த மாதம் மும்பைக்கு வந்து ‘சம்பாஜி பிடேவைக் கைது செய்யவேண்டும் என்றும் அவர் நடத்திவரும் அமைப்பைப் பற்றி விசாரணை நடத்தவேண்டும்’ என ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதன் பிறகும்கூட அவரை இதுவரை போலீஸ் அவரை கைதுசெய்யவில்லை. 

மிலிந்த் ஏக்போடே, சம்பாஜி பிடே இருவரும் பாஜகவுக்கு நெருக்கமானவர்கள் என்பதால்தான் மாநில  அரசு அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது என்று தலித் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன. 

தலித்துகளுக்கு எதிராக மாறுகிறதா மாநில அரசு 

மகாராஷ்டிர மாநிலத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு அமைந்ததிலிருந்து எஸ்சி /எஸ்டி மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும்  பாதிக்கப்பட்டவர்கள்  அளிக்கும் புகார்களின்மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை என்றும் பலரும் கூறி வருகின்றனர்.  அரசின் ஆவணங்களை பார்க்கும் போது 2013 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் 2368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் பாஜக அரசு பதவிக்கு வந்த பிறகு 2015 ல் அது 1295 ஆகக் குறைந்துவிட்டது. அதுபோலவே இந்த வழக்குகளில் தண்டனை வழங்குவதும் குறைந்துவிட்டது என தெரிய வந்துள்ளது

தலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது மட்டுமின்றி தற்போது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உச்சநீதிமன்றம் முடக்குவதற்கும் ஃபட்னாவிஸ் அரசுதான் வழிகோலியது. அந்தச் சட்டத்தின் பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக திருத்தம் கொண்டுவரவேண்டும் என 2016 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில பாஜக அரசுதான் மத்திய அரசை வலியுறுத்தியது

தற்போது தலித் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் மகாராஷ்டிர மாநில பாஜகவின் தலித் விரோதப் போக்கிற்கு இன்னுமொரு சான்றாக இருக்கிறது என கூறுகின்றனர் தலித் செயற்பாட்டாளர்கள். மக்களவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டே இது போன்ற செயல்பாடுகள் இருக்கலாம் எனவும் பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர். மக்களின் மனநிலையும் மாறும். ஆட்சியாளர்களும் மாறலாம் என்பது மட்டுமே உண்மை. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close