[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

இந்த நிலம்தான் ராஜா! இந்தத் தமிழ் மண்தான் ராஜா!

maestro-ilaiyaraaja-birthday-special-story

 இளையராஜாவை ஈர்த்தவர் இருவர். முன்னவர், எம்.எஸ்.வி. பின்னவர், கண்ணதாசன். இந்த இரண்டு உயிரும் ராஜாவின் உடம்பில் ஓர் உயிராக கலந்திருக்கிறது. ‘அன்னக்கிளி’க்கு கண்ணதாசன்தான் பாடல் எழுதியிருக்க வேண்டும். அதற்கான அழைப்பு வந்து இளையராஜா ஹோர்மோனிய பெட்டியோடு காத்திருந்தக் காலம். கண்ணதாசன் வரவில்லை. ராஜாவின் கனவை உசுப்பிவிட்டுவிட்டு அவர் பாம்பே போய் சேர்ந்திருந்தார். தன் முதல் முயற்சி முளைக்கும் போதே தடைப்போட்டு தவழத் தொடங்கியதில் ராஜாவிற்கு வருத்தம். பஞ்சு அருணாசலத்திடம் ‘அண்ணே! அண்ணே’ என அவர் முணங்கிக் கொண்டு நின்றிருந்தார். பஞ்சுவே பாடலை எழுத தீர்மானித்துவிட்டார். ராஜாவின் மனம் பொறுக்கவில்லை. பொங்கியது. கண்ணதாசனுக்காக ஏங்கியது. அன்று காலம் போட்ட இடைவெளி இறுதியில் இளையராஜாவிடமே வந்து முற்றியது. 

முதல் பாடல் தவறினால் என்ன? கண்ணதாசன் தன் இறுதி பாடலை எழுதிக் கொடுத்தது இளையராஜாவின் இசைக்காகதான். ‘கண்ணே கலைமானே’ பாடல் பிரசாத் ஸ்டுடியோவில் உட்கார்ந்து கண்ணதாசன் எழுதியது. அதை எழுதுவதற்கு முன்னால் கண்ணப்பனை பார்த்து கண்ணதாசன் சொன்னார். ‘இளையராஜா ரொம்ப அதிருஷ்டசாலிடா..நான் இனிமேல் சினிமாவிற்கு பாட்டு எழுதப் போறதில்லை. இதுதான் கடைசிப்பாட்டு’ என்று. அவரது முடிவில் அவர் பின் வாங்கவில்லை. வழக்கமாக கவிதா ஹோட்டலில் உட்கார்ந்தும் வேறு சில இடங்களில் உட்கார்ந்தும் பாடல்களை எழுதி வந்த கண்ணதாசன் தன் இருப்பிடத்தை மாற்றி எழுதிக் கொடுத்தது மொத்தம் மூன்று பாடல்கள். அதில் இறுதிப் பாடல்தான் ‘கண்ணே கலைமானே’. ‘இந்தக் கண்ணே கலைமானே’பாடல் என்றால் எம்.எஸ்.வி உயிர். அதில் வரும் வரியை கண்டு அப்படியே உருகுவார்.

கண்ணதாசன் இறந்துவிட்டார். எம்.எஸ்.வி ஒருநாள் கனவில் வந்து ‘எனக்கு சிலை எடுடா’ என கட்டளை போடுகிறார். அதை அப்படியே வேத வாக்காக நம்பி சென்னையில் சிலை எடுத்தார் எம்.எஸ்.வி. அதற்காக இளையராஜாவை அழைத்துக் கொண்டு அவர் சென்னை, சேலம், கோவை என மூன்று இடங்களில் கச்சேரி நடத்தி காசு சேர்த்தார்.  சேலத்தில் நடந்த கச்சேரியில் ராஜாவை அழைத்து ‘கண்ணே கலைமானே’வை பாட சொன்னார் எம்.எஸ்.வி. ராஜா பாடத் தொடங்கும் போது ஒரு குரல் தோளை வருடியது. திரும்பினால் எம்.எஸ்.வி. ‘இந்தப் பாட்டுக்கு நான் ஹார்மோனியம் வாசிக்கட்டுமா?’எம்.எஸ்.வி வாசிக்க தடையா? தலை ஆட்டினார் ராஜா. அந்தப் பாடலில் வரும் ஒரு வரி, ‘ஏழை என்றால் அதில் ஒரு அமைதி’ ஒலிப்பெருக்கியில் ஒலிக்கிறது. அப்படியே ஹார்மோனியத்தை போட்டுவிட்டு கட்டி அணைத்து ராஜாவை உச்சு முகர்ந்தார் எம்.எஸ்.வி. ஆம்! குருவை மிஞ்சிய சிஷ்யன் ராஜா.    

இன்று அவருக்கு 75. இளையராஜா ‘அன்னக்கிளி’க்காக அவர் ஹார்மோனியம் இசைத்தது 1976ல். அவரது 33-ஆவது வயதில் அவர் திரை இசைக்கு நுழைகிறார். உண்மையை சொன்னால் ‘அன்னக்கிளி’ அவருக்கு முதல் படம். ஆனால் அவர் முதன்முதலாக மெட்டு போட்டது அந்தப் படத்திற்காக அல்ல; அது கண்ணதாசன் எழுதிய ஒரு இரங்கற்பாவிற்கு. 1960 நேரு இந்தத் தேசத்தைவிட்டு மறைந்தபோது தினத்தந்தியில் கண்ணதாசன் எழுதிய ஒரு விருத்தப்பாவிற்கு அவர் முதன்முதலாக மெட்டு போட்டார். ‘சீரிய நெற்றி எங்கே.. சிவந்த நல் இதழ் எங்கே? கூரிய விழிகள் எங்கே? குறுநகை போனதெங்கே?’ என்ற பாடலை இன்றும் மனப்பாடமாக ராஜா பாடினால் கண்ணீர் கண்களை முட்டும். 

ராஜா, சினிமாவிற்கு வந்த பிறகு அவர்தான் இசை உலகின் ராஜா. புகழின் உச்சியில் உட்கார்ந்திருந்தார் அவர். ‘சாமி..சாமி’ அவரை எல்லோரும் கொண்டாடித் தீர்த்தனர். 15 வயதில் தன்னுடைய எதிர்காலம் என்ன? என அவர் ஏங்கித்தவித்த போது அவர் ஞானம் அடைய செய்தது ஒரு பாடல். வருங்காலத்தில் என்ன ஆவோம்? பாட்டு வாத்தியாரா? இல்லை ஒரு ஆபீஸில் கிளார்க் வேலையா? என யோசிக்கத் தொடங்கிய காலத்தில் அவர் காதை வந்தடைந்தது அந்தப் பாடல். அதுவும் கண்ணதாசன் எழுதியது. ‘இளமை என்பது வெறும் கனவு மயம்- இதில் மறைந்து சில காலம். தெளிவும் அறியாது முடிவும் புரியாது மயங்குது எதிர்காலம்’ என்ற வரியை இன்றும் அவர் வாழ்நாள் முழுக்க ஒப்பித்து கொண்டிருக்கிறார்.

ராஜாவை பற்றி சொல்பவர்கள் இரண்டு விஷயங்களை சொல்வார்கள். அவர் இசையமைத்த முதல் பாடலின் போது மின்சாரம் நின்றுவிட்டது. அதேபோல் அவர் ஒரு முன் கோபி. ஆம்! அவர் முன் கோபிதான். ஞானமே இல்லாமல் அவர் முன் உரையாட நினைத்தால் முன் போபி. அவரின் குருநாதர்கள் அப்படி. ஜெயகாந்தன் ஒரு முன் கோபி. அவரை சிங்கமாக பார்த்து வளர்ந்தவர் ராஜா. அந்த வீட்டு சரக்கு இவர் வீட்டுக்கு வந்துசேர்ந்தது. பல சொல்வார்கள் ராஜா யாரையும் பாராட்டமாட்டார் என்று. குறையை அறிந்தவர் கண்ணுக்கு குற்றம் முன்னால் தெரிந்துவிடும். அப்படி இருந்தும் அவர் பலரை பாராட்டி இருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிக் கொண்டு சென்னையை தொட்ட போது அவருக்கு இசையமைப்பாளர் உலகமே திரண்டு விழா எடுத்தது. அதில் எம்.எஸ்.விக்கு விருது கிடைக்கவில்லை என பலர் வருந்தினர். ராஜா மேடைக்கு வந்தார். ‘வித் அவுட் கம்போசர் வாட் த அவார்ட் வில் டு?’ என்றார். அரங்கம் அதிர்ந்தது. ஜான்வில்லியன்ஸுக்கு 4 ஆஸ்கர் அவார்ட் கிடைத்தது. அந்த ஒவ்வொரு அவார்டுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருந்தது. ஆனால் நம்ம ஆள்..இங்க இருந்து போனார். கொடுனு சொன்னார். ஒரே நேரத்தில் இரண்டு அவார்ட் வாங்கி வந்தார் என புகழ்ந்தார் ரஹ்மானை. அதுதான் ராஜாவின் நடை. அந்த நடை ராஜ நடை.

ஆயிரம் பாடல்கள் மீறி இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது அவரது இசை நதி. உலகம் முழுக்க ஏ.ஆரின் இசை நிறைந்தபோதும் உள்ளூரில் ஐ ஆரின் இசையை இன்னும் நிறுத்த முடியவில்லை. ராஜா என்றால் ஒரு கலாச்சாரம். நாம் தூங்குவதற்கு ராஜா வேண்டும். நாம் திருவிழாவை கொண்டாடுவதற்கு ராஜா வேண்டும். அழ வேண்டும் என முடிவு செய்துக் கொண்டு ராஜாவின் பாடலை கேட்டால் கண்ணீர் ததூம்பும். அதுதான் மெய். இந்த நிலம் இருக்கும் வரை இந்த ராஜா நின்று கொண்டே இருப்பார்.

உண்மையாக சொல்லப்போனால் திரை இசை என்பது ராஜாவுக்கு ஒரு சாக்கு. அவர் இசை சினிமாவை மீறியது. காட்சிகளை கடந்தது. எந்தத்துணையும் இல்லாமல் வெறுமனே அவரது இசைக் கோர்வைகளை ஒலிக்க விடும் இருள் நிறைந்த விடுதிகள் அதை உறுதி செய்யும். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close