[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கச்சத்தீவு திருவிழா முடிந்த நிலையில் 5 நாட்களுக்கு பின் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இன்று இரவு மும்பை செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS எந்த மொழியில் நடித்தாலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி - நடிகர் அரவிந்த் சாமி
  • BREAKING-NEWS தனது நடிப்புத் திறமையை பலவிதங்களில் வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி - இளையராஜா
  • BREAKING-NEWS ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் வருகிறது, குறை இருந்தால் சிற்பியே நிவர்த்தி செய்வார் - அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இந்தியாவில் மிகவும் திறமையான நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் - இளையராஜா

தேர்ச்சி விகிதம் அதிகரிப்பை வளர்ச்சி என்று சொல்லலாமா?

can-increasing-pass-percentage-be-called-growth

திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அங்கு வந்த நண்பர் ஒருவர் தனது பையனை சிபிஎஸ்சி பள்ளியில் படிப்பதாக அறிமுகப்படுத்தினார். பையனும் சிபிஎஸ்சி பள்ளியில் படிப்பதை அழுத்திச் சொன்னான். நான் அவனிடம் டெல்லியின் முக்கியத்துவம் என்ன என்று ஒரு கேள்வி கேட்டேன். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. இந்தியாவின் தலைநகரம் எது என்று கேட்டேன். டெல்லி என்றான். ஒரே கேள்விதான் அதை மாற்றிக் கேட்கும்போது பதில் தெரியாமல் மாணவன் திணறுகிறான். இந்தக் கேள்விக்கு இந்த பதில் என்று படிக்கும் நமது பாடமுறைதான் இதற்குக் காரணம். தலைநகரம் என்றால் என்ன? ஒரு தலைநகரத்தின் வரையறை என்ன? என்று கற்பிக்கும் பழக்கம் நமது கல்வி முறையில் இல்லை. நமது கல்வி முறை மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

மதிப்பெண்களைத் துரத்திச் செல்லும் மனோபாவத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இந்தக் கல்விமுறை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அப்படி அதிக மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் அவர்கள் விரும்பிய படிப்பில் இடம் கிடைத்தும் விடுவதில்லை. 2000 மருத்துவப் படிப்பு இடங்கள் இருந்தால் அதற்கு 50 ஆயிரம் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்று வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கே இந்த நிலை என்றால் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களின் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை. மதிப்பெண் குறைவது அந்த மாணவனின் பிரச்னை என்று நினைக்கிறோம். ஆனால் அதற்கு அவனின் சமூகப் பொருளாதார சூழல், அவன் படிக்கும் பள்ளியில் உள்ள கற்றல் சூழல் போன்ற பல காரணிகள் உள்ளன. அரசுப் பள்ளிகளில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். பெரும்பகுதி பள்ளிகளில் அது நிரப்பப்படவில்லை. இது ஒரு புறமிருக்க நமது கற்பித்தல் முறையும் பாடத்திட்டமுமே மாற்றப்பட வேண்டும். சமச்சீர் கல்வி ஓரளவுக்கு மாற்றம் என்று வைத்துக் கொண்டாலும் அது கூட பத்தாம் வகுப்போடு நின்று போனது. அதுவும் கூட தற்போது ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. மேம்படுத்தப்பட வேண்டும்.

கற்பித்தல் முறை முழுவதும் செயல்வழிக் கற்றலாக அமைய வேண்டும். உதாரணமாக இயற்பியல் படிக்கும் மாணவ மாணவிகள் பக்கத்தில் உள்ள சின்ன லேத் தொழிற்சாலைக்குச் சென்று பார்க்க வேண்டும். இவர்கள் பாடத்தில் படிக்கும் வெர்னியர் காலிபரையும், மைக்ரோ மீட்டரையும் அங்கே பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய தொழிலாளிகள் இயல்பாக பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். வேதியியல் படிக்கிறவர் லேபரட்டரிக்கும், மூலிகைப் பண்ணைகளுக்கும் போக வேண்டும். இப்படி எல்லாம் செயல்வழிக் கற்றலாக அமையும் போதுதான் உண்மையான அறிவு மாணவர்களுக்கு வளரும்.

பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கும்போது, மற்றொரு புறம் பள்ளிக் கல்வியையே ஒழித்துக் கட்டும் முயற்சியாக நீட் தேர்வு போன்ற திட்டங்கள் வருகின்றன. நீட் தேர்வு போன்ற திட்டங்கள் தனியார் பயிற்சி நிலையங்களைத்தான் வளர்க்கும். சிபிஎஸ்சி பாடத்திட்டம் கூட அதற்குப் போதாது. தற்போது ஐஐடியில் சேர்பவர்கள் அது போன்ற கோச்சிங் சென்ட்டர்களில் படித்தவர்கள்தான். லட்சக்கணக்கான பணம் கொடுத்து சேர்பவர்கள் மட்டுமே ஐஐடியில் நுழைய முடிகிறது.

எனவே நமது கல்வித் திட்டத்தில் அடிப்படையான மாற்றம் அனைவருக்கும் கற்பதற்கான சம வாய்ப்பு வழங்கப்படுகிறதா என்பதில்தான் இருக்கிறது. பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பது வளர்ச்சி அல்ல. அரசு தன்னிடம் இருக்கும் குறைகளை மறைக்க தேர்ச்சி விகிதத்தைக் கூட்டிக் காட்டுகிறது. உண்மையில் முழுமையான கற்றலுக்கான வாய்ப்பு அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். அப்படிப் பார்த்தால் மாணவர்களை முழுமையாக கற்க அனுமதிப்பது அரசுப் பள்ளிகள்தான். சிஇஓ இன்ஸ்பெக்சன் போன்ற கண்காணிப்புகள் அரசுப் பள்ளிகளின் பொறுப்பை அதிகப்படுத்துகின்றன. இது போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் தனியார் பள்ளிகளுக்கு இல்லை. ஒரு புத்தகத்தில் உள்ள 60 சதவீதத்தை ஒரு மாணவன் அல்லது மாணவி முழுமையாகப் படித்து விட்டாலே தேர்ச்சி பெற்று விடலாம் என்பதே நிதர்சனம்.

-பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close