[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

“சாதிய ரீதியில் கட்சிகளை சேர்ப்பது அம்பேத்கர் கருத்துக்கு எதிரானது” - ரவிக்குமார் 

vck-general-secretary-ravi-kumar-comment-on-director-pa-ranjith-statement-on-dalit-parties-unity

பட்டியலின கட்சிகள் சேர்ந்து சாதி அடிப்படையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற பேச்சு ஆபத்தானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் கூறியுள்ளார்.

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 7 தனித் தொகுதிகளில் பட்டியலின கட்சிகள் ஒன்று சேர்ந்து போட்டியிட வேண்டும் என்ற கருத்தினை முன் வைத்தார். 

பட்டியலின கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்ற கருத்து சனாதனவாதிகளுக்கும், மற்றவர்களும் சாதி ரீதியான அணி சேர்வதற்கும் வழிவகுத்துவிடும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், “எஸ்சி கட்சிகள் சேர்ந்து சாதி அடிப்படையில் கூட்டணி அமைக்கவேண்டும்' என்ற பேச்சு ஆபத்தானது.அது தலித்துகளுக்கு எதிரான திரட்சிக்கே வழிவகுக்கும். சாதியாகத் திரளவேண்டும் என்பது சனாதனவாதிகளின் ஆலோசனை. பாமகவை வைத்து செய்த சோதனையை இப்போது தலித் கட்சிகளை வைத்து செய்யப் பார்க்கிறார்களா?” என்று குறிப்பிட்டுள்ளார். 

          

பட்டியலின கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்து குறித்து புதிய தலைமுறைக்கு ரவிக்குமார் அளித்த பேட்டியில்:-

“தலித் மக்கள் பாதிக்கப்படும்போது அதற்காக  மற்ற அரசியல் கட்சிகளில் இருக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்  பேசவில்லையே  என்ற ஆதங்கத்தில் பேசியிருந்தால் அந்த உணர்வைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், தலித் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக பட்டியலின கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்பதை முன்மொழிந்தால் அது ஆபத்தானது. ஏனென்றால், தலித் என்பதன் பொருள் சாதி ஒழிப்புதான், சாதிய பெருமை பேசுவது அல்ல. பட்டியலின கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கை மற்ற சாதிகளின் அணி சேர்க்கைக்கு வழி வகுத்துவிடும். கடந்த 10 ஆண்டுகளாக சிலர் மேற்கொண்டு வரும் வெறுப்புப் பிரச்சாரத்துக்கும், சாதிய அணிதிரட்டல் முயற்சிகளுக்கும்  நியாயம் வழங்குவது போல் ஆகிவிடும். அவர்கள் சாதியாக அணி சேர்வதை ஊக்குவிக்கும். ஏற்கனவே கொடுமைகளை அனுபவித்து வரும் பட்டியலின மக்களுக்கு, இது மேலும் இன்னல்களை அதிகரிக்கச் செய்யும். எதிர்மறையான திரட்சியை உருவாக்கும். இதனால், வன்கொடுமைகள் பெருகும் அபாயம் உள்ளது. 

                   

சாதி ரீதியாக ஒன்று சேர வேண்டும் என்பது இந்துத்துவ சனாதனவாதிகளின் ஆலோசனை. ஒவ்வொரு சாதியும் தனது அடையாளத்தின் கீழ் திரளவேண்டும், தனது சாதியின் பெருமையைப் பேசவேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். அதன் விளைவுதான் பட்டியலிலிருந்து வெளியேறும் அரசியலாக வெளிப்படுகிறது. சாதி பெருமை பேசினால், சாதி அமைப்பு மோசமானது என்று என்று யாரும் சொல்லமாட்டார்கள். சாதிப் பெருமைகள் பேசினால், சாதியால் தான் சமூகம் முன்னேறாமல் உள்ளது என்று பேசமாட்டார்கள். எனவே சாதி அமைப்பை ஏற்றுக் கொண்டு நியாயப்படுத்தும் நிலை ஏற்பட்டுவிடும். 

இதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் சாதிய அடையாளங்களை ஊக்குவிக்கின்றன. அவர்களின் தூண்டுதலின் பேரில் தான் ஏற்கனவே தலித் அல்லாத சாதிகளின் கூட்டணியை பாமக உருவாக்கியது. தலித் அல்லாத சாதிகளின் கூட்டணி என்றே அவர்கள் அதனை அறிவித்தார்கள். அவர்களுடைய முயற்சிகளின் பின் விளைவாகத்தான் தற்போது தலித் மக்கள் மீது வன்கொடுமைகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. எனவே, பட்டியலினத்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்ற கருத்து சனாதனவாதிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்துவிடும். 

பட்டியலின கட்சிகள் அப்படியே சேர்ந்து போட்டியிட்டாலும், தற்போதைய அரசியல் அரங்கில் என்ன வெற்றி வாய்ப்பு இருக்கும்? இந்திய பாராளுமன்ற அரசியல் முறையில்  எவரும் தன்னுடைய சாதியின் வாக்கை மட்டும் பெற்று ஆட்சி அமைக்க முடியாது. எந்தவொரு கட்சியாலும் அப்படி முடியாது. நம்முடைய தேர்தல் முறையே, சமூகத்தில் இருக்கிற எல்லோரும் ஒருங்கிணைந்து ஒரு கொள்கையை முன்வைத்துப்  பேசுவதற்கான ஏற்பாடாக இருக்கிறது. எனவே இது தலித்துகளின் வாக்குகளைப் பிரித்து அவற்றை செல்லாத வாக்குகளாக்கிவிடும். 

          

புரட்சியாளர் அம்பேத்கர் இந்திய ஜனநாயகத்தைப் பற்றி பேசும் போது, “இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை வகுப்புவாத பெரும்பான்மை என்றார். அதன் கையில் அதிகாரத்தைக் கொடுப்பது சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்றார். எனவே அதை அரசியல் பெரும்பான்மையாக மாற்றவேண்டும் என்றார். ஆனால், பட்டியலின கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் என்ற யோசனை வகுப்புவாதப் பெரும்பான்மைக்கு வாய்ப்பளிப்பதாக மாறிவிடும். இது அம்பேத்கரின் கருத்துக்கு எதிரானது. அதனால், இந்த கருத்து தவறானது மட்டுமல்ல, ஆபத்தானது என்று கருதுகிறேன்” என்று ரவிக்குமார் கூறியுள்ளார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close