[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பு - ஜம்மு, ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு அமல் 

section-144-imposed-in-srinagar-public-movement-barred-schools-colleges-shut

ஜம்மு காஷ்மீரில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அங்கு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வருவதால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? அல்லது மாநிலம் மூன்றாக பிரிக்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இதனால் காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இந்தச் சூழலில் நள்ளிரவு முதல் இணையதள சேவைகள் முடக்கி வைக்கப்பட்டு, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் உஸ்மான் மஜித் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் தரிகாமி இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

                   

காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, நள்ளிரவு முதல் தாம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதை உணர்வதாக குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரில் என்ன நடக்கப் போகிறது என்பது இறைவனுக்கே வெளிச்சம் என்றும், பொதுமக்கள் அனைவரும் அமைதியுடன் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

மெகபூபா முஃப்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை போன்ற தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பது மிகவும் கொடூரமானது என தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களின் குரல்வளை நசுக்கப்படுவதை ஒட்டுமொத்த உலகமும் தற்போது பார்த்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். 

உமர் அப்துல்லா பதிவிட்ட ட்விட்டுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் தலைவர் சசி தரூர், ஒவ்வொரு இந்தியர்களும், காஷ்மீரில் உள்ள தலைவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால், இப்பிரச்னையை அங்கு எழுப்பப் போவதாகவும் சசி தரூர் ஆறுதல் தெரிவித்துள்ளார். 

               

இந்தச் சூழலில் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், பொதுக் கூட்டங்கள் நடத்தவோ, பேரணியாக செல்லவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல், ரஜோரி மற்றும் கிஸ்த்வார் மாவட்டங்களில் இரவு நேரங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, ரேசாய் மற்ம் தோடா மாவட்டங்களில் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் முக்கிய இடங்களில் கலவர தடுப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close