[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

உற்பத்திக் குறைப்பில் டாடா நானோ கார் – கலைகிறதா ஒரு மாபெரும் கனவு?

tata-nano-car-production-is-decrease

1 லட்சம் ரூபாயில் கார் – என்பது டாடா நிறுவனத்தின் கனவுத் திட்டங்களில் ஒன்று. அந்தக் கனவுதான் இப்போது டாடா நிறுவனத்தின் கையைச் சுட்டுக் கொண்டு இருக்கிறது. உலகின் மிக மலிவான காரான டாடா நானோவின் விற்பனை தொடர்ந்து சரிவதால், அதன் உற்பத்தி வரலாறு காணாத அளவுக்குக் குறைந்து உள்ளது. மாதம் 2.4 லட்சம் நானோ கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட டாடாவின் சனந்த் பாக்டெரியில் கடந்த மாதம் ஒரே ஒரு நானோ மட்டுமே உற்பத்துயாகி இருக்கிறது. நானோ என்ற கனவின் வரலாறு என்ன? அது வழுக்கியது எங்கே? 

ஹிட்லர் காட்டிய பாதை:

மலிவு விலையில் கார்களை உற்பத்தி செய்தால் அது தேசத்தில் மாபெரும் மோட்டார் வாகனப் புரட்சியை ஏற்படுத்தும் என்பதை உலகுக்குச் சொன்ன நாடு ஜெர்மனி. ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியின் போது ‘ஆயிரம் ஜெர்மன் மார்க்குகள் தொகைக்கு ஒரு கார்’ – என்ற திட்டத்தை அறிவித்தார் ஹிட்லர். அதற்காக 1937ல் நாஜி அரசாங்கம் போக்ஸ்வேகன் என்ற கார் நிறுவனத்தைத் தொடங்கியது. அந்தத் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது, ஐரோப்பாவில் மோட்டார் வாகனப் புரட்சியின் அலை வீசியது. இன்று ஐரோப்பிய நாடுகளில் வருமானமற்றவர்கள் கூட கார் வைத்திருப்பதற்கு அந்த அலைதான் காரணம். இந்த அலை ஆசிய கண்டத்தில் வீசவே இல்லை.

நானோ கனவு:

இந்திய மக்களுக்காக விலை மலிவான கார்களை உருவாக்க வேண்டும் – என்பது டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவின் கனவுகளில் ஒன்று. 2003 முதல் அந்தக் கனவுக்கு செயல் வடிவம் கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன, 2005ல் இந்திய சாலைகளில் ஆட்டோக்களை ஓரம்கட்டி ‘டாடா ஏஸ்’ வாகனம் பெற்ற வணிக ரீதியிலான வெற்றி இதற்கு ஊக்கம் கொடுத்தது. 2006ல் டாடா நானோ உற்பத்தி திட்டமிடப்பட்டது. 2008ல் முதல் டாடா நானோ காட்சிக்கு வைக்கப்பட்டது. 2009ல் டாடா நானோ கார் இந்திய சந்தையில் டயர் பதித்தது.

விற்பனையில் சரிவு:

2008ல் டாடா நானோ வடிவமைக்கப்பட்ட போது இருந்த உதிரிபாக விலைகள் 2009ல் உயர்ந்தன. இதனால் ஒரு லட்ச ரூபாய்க்குள் காரை கொடுக்க முடியவில்லை. கூடுதல் விலை இதன் நற்பெயரைக் கெடுத்தது. காரை அத்தியாவசியமாக அல்லாமல் ஆடம்பரமாகப் பார்க்கும் இந்திய மனநிலையும் நானோவை ஏற்க மறுத்தது. இடப்பற்றாக்குறை, சில தீ விபத்துகள், பவர் ஸ்டியரிங் இல்லாதது – என அதன் இயலாமைகள் விவாதிக்கப்பட்டன. உலகமே திரும்பிப் பார்க்க சந்தைக்கு வந்த நானோவுக்கு காலபோக்கில் வரவேற்பு வெகுவாகக் குறைந்தது.

2014-15ல் நானோ ஃபேஸ்லிஃப்ட் என்ற மேம்படுத்தப்பட்ட நானோ அறிமுகமனது. அதற்கும் போதிய வரவேற்பில்லை. ஆண்டுக்கு 2.5 லட்சம் நானோ கார்கள் உற்பத்தியாகி, அதில் 10% கூட விற்காத நிலையில் டாடா நிறுவனம் நானோவால் தொடர்ந்து நட்டத்துக்கு உள்ளானது. 2016 ஜூன் மாதத்தில் வெறும் 481 நானோ கார்கள் மட்டுமே விற்பனையாக, ஆட்டோமைபைல் உலகமே அதிர்ந்தது.

மீண்டும் வந்த ரத்தன் டாடா:

அதுவரை ரத்தன் டாடாவின் கனவுத் திட்டம் என்பதால் நானோவைச் சுமந்து வந்த டாடா குழுமத்தின் புதிய தலைவர் சைரஸ் மிஸ்திரி ‘நானோவை நிறுத்தி விடலாமா?’ என்று டாடா சன்ஸ் குழும நிறுவனத்தின் இயக்குநர் குழுவிடம் கேட்டார். அதனாலேயே அவருக்கும் ரத்தன் டாடாவுக்கு மோதல் முற்றி, அவர் வெளியேற்றப்பட்டார். ரத்தன் டாடா மீண்டும் வந்த பின்னர் 2017 முதல் நானோவில் புதிய மாடல்களை உருவாக்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆனால் இதுவரை அந்த ஆய்வுகளால் நானோவின் விற்பனை சரிவைக் காப்பாற்ற முடியவில்லை என்பதே நிதர்சனம்.

மீளுமா நானோ?:

நானோ என்பது டாடா நிறுவனத்தின் கனவுகளில் ஒன்றாகவும், அதன் புகழுக்கு உரிய படைப்பாகவும் உள்ளதாலேயே டாடா நிறுவனம் அதை நிறுத்தாமல் உள்ளது. ஒவ்வொரு நானோ கார் விற்கும் போதும் டாடாவுக்கு நட்டம் என்றாலும் அந்த விற்பனையை அது விரும்புகிறது. ஆனால் அது மக்களின் விருப்பமாக இல்லை. இந்திய சந்தைகளில் எவ்வளவு வாய்ப்புகள் உண்டோ அந்த அளவுக்கு சவால்களும் உண்டு என்பதற்கு சான்றாக நிற்கிறது டாடா நானோ.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close