[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
  • BREAKING-NEWS வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது - கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை
  • BREAKING-NEWS சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை- பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் தீவிர சோதனை

மறக்க முடியுமா? மகேந்திரனுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த வாய்ப்பு!

legendary-director-mahendran-passes-away

பிரபல திரைப்பட ஜாம்பவான் மகேந்திரன் காலமாகிவிட்டார் இன்று. அஞ்சலியால் நிரம்பி வழிகிறது சமூக வலைத்தளங்கள். அவர் பற்றியும் அவர் படங்கள் பற்றியும் பேச, சொல்ல ஏராள கதைகள் இருப்பதாகச் சொல்கிறது திரையுலகம். 

மகேந்திரன், 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா. ஆசிரியர். தாயார் மனோன்மணி, கம்பவுன்டர். மகேந்திரனின் இயற்பெயர் அலெக்ஸாண்டர். பள்ளி, கல்லூரி காலங்களில் ஒட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டார். சீனியர் விளையாட்டு வீரர் எல்.மகேந்திரனால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டார். இப்படித்தான் அலெக்ஸாண்டர், மகேந்திரன் ஆனார். 

காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ’பி.ஏ' படித்துக்கொண்டிருந்தபோது, 1958-ஆம் ஆண்டு கல்லூரி விழா நடந்தது. அதில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார். அவரது பேச்சை ரசித்த எம்.ஜி.ஆர், வாழ்த்துக்களை எழுதி கொடுத் தார். 

சட்டக் கல்லூரியில் படிக்க சென்னை வந்தவர், 'இனமுழக்கம்' என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். சினிமா விமர்சன மும் எழுதினார். அப்போது எம்.ஜி.ஆர் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்புக்குச் சென்றார். அவரைப் பார்த்த எம்.ஜி.ஆர், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே, நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

மறுநாள் மகேந்திரன், லாயிட்ஸ் ரோட்டில் இருந்த அவர் வீட்டுக்கு சென்றார். மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்து கல்கியின் "பொன்னியின் செல்வன்'' நாவலை திரைக்கதை எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர். அந்த திட்டம் தள்ளிப் போனதால் தனது நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார் எம்.ஜி. ஆர். "அனாதைகள்'' என்ற நாடகத்தை எழுதினார். அதை ‘வாழ்வே வா’' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்தார். பைனான்சியர் இறந்ததால் அந்தப் படம் பாதியில் நின்றுவிட்டது.  இந் நிலையில் "காஞ்சித் தலைவன்'' படத்தில் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக, மகேந்திரனை சேர்த்துவிட்டார் எம்.ஜி.ஆர். 

1966-ம்ஆண்டு "நாம் மூவர்'' படத்துக்கு மகேந்திரன் கதை எழுதினார். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அதே தயாரிப்பில் வெளியான "சபாஷ் தம்பி'', "பணக்காரப்பிள்ளை'' ஆகிய படங்களுக்கு மகேந்திரன் கதை எழுதினார். சிவாஜி கணேசன் நடித்த "நிறைகுடம்'' படத்திற்கும் கதை எழுதினார்.

"துக்ளக்'' பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி வந்த மகேந்திரனை, நடிகர் செந்தாமரையும், சிவாஜி நாடக மன்ற இயக்குனருமான எஸ்.ஏ.கண்ணனும் நாடகம் ஒன்றை எழுதித்தரும்படி கேட்டனர். "இரண்டில் ஒன்று'' என்ற பெயரில் எழுதி கொடுத்தார், மகேந்திரன். அதில் எஸ்.பி.சவுத்ரி என்ற கண்டிப்பான போலீஸ் அதிகாரி வேடத்தில் செந்தாமரை நடித்தார்.
  
நாடகத்தை பார்க்க வந்த சிவாஜி, "சிவாஜி நாடக மன்றம் மூலம் இதை நடத்தலாம், அதில் எஸ்.பி.சவுத்ரியாக நான் நடிக்கிறேன்'' என்றார். ‘இரண்டில் ஒன்று, ’தங்கப்பதக்கம்’ ஆகி வரவேற்பை பெற்றது. இது படமானபோது, கதை-வசனத்தை மகேந்திரன் எழுத, பி.மாதவன் இயக்கி னார். அதனைத் தொடர்ந்து ஆடுபுலி ஆட்டம், காளி உட்பட பல படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை என எழுதினார்.

இந் நிலையில் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் மகேந்திரனுக்கு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார். உமா சந்திரனின் "முள்ளும் மலரும்'' நாவலை திரைக்கதை, வசனம், எழுதி படமாக்கினார் மகேந்திரன். இந்தப் படம் அவரைச் சிறந்த இயக்குனர் ஆக்கியது. அடுத்து, புதுமைப் பித்தனின் "சிற்றன்னை'' கதையை "உதிரிப்பூக்கள்'' ஆக்கினார். சிறந்த கலைப்படைப்பாக இன்றுவரை பாராட்டப்படுகிறது இந்தப் படம். திரைப்படம் என்பது விஷுவல் மீடியம் என்பதை முதன் முதலில் உணர்த்திய தமிழ்ப் படம் இதுதான்.

இவர் இயக்கிய "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' சென்னையில் ஒரு வருடம் ஓடியது.  ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் 1980 ல் இவர் இயக்கிய "ஜானி'' படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. இன்றுவரை பேசப்படும் திரைப்படங்களில் ஜானிக்கும் இருக்கிறது இடம்!

’தெறி’ மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரன், நடிப்பிலும் முத்திரைப் பதித்தார். மகேந்திரன் தனது படைப்புகள் மூலம் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close