Published : 16,Apr 2021 12:55 PM

"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு!"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு

TMC-MP-Mahua-Moitra-attacked-the-Election-Commission-over-Covid-19-issue

மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், 8 கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்துவது சரியல்ல என்று தேர்தல் ஆணையத்தை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, கொரோனா இரண்டாவது அலைக்கு மத்திய அரசும், தேர்தல் ஆணையமும்தான் பொறுப்பு என்று அவர் சாடியுள்ளார்.

மேற்கு வங்கத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 17) நடைபெறவுள்ளது. முந்தைய நான்கு கட்டங்கள் முறையே மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இந்தத் தேர்தலில் கட்சிகள் வாக்குகளுக்காக மோதிக்கொண்டதை விட கொரோனாவுடன் மக்கள் போராடியதுதான் அதிகம் எனக் கூறும் அளவுக்கு மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரெசவுல் ஹக், கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார். இதுதான் மேற்கு வங்கத்தில் தற்போதைய நிலைமையாக இருக்கிறது. கொரோனா 2-ம் அலை தீவிரமடைந்துள்ளது. இந்த நேரத்தில் மீதமுள்ள 4 கட்ட தேர்தல்கள் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் முறையிட்டுள்ளன.

ரெசவுல் ஹக்கின் மறைவுக்கு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இரங்கல் தெரிவித்ததோடு, தேர்தல் பேரணிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறிய பல்வேறு நிகழ்வுகளையும் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். மேலும் "கொரோனா விதிமுறைகள் எவ்வாறு மீறப்படுகின்றன என்பதைக் கூறி, கமிஷனுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன், நம் விழிப்புணர்வு மட்டத்தை உயர்த்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவும் தேர்தல் ஆணையம் மீது இந்த விவகாரத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, மோசமான தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் 8 கட்ட தேர்தலை கட்டாயப்படுத்துவது, மனிதர்களின் உயிர்ப் பிரச்னையில் அலட்சியம் காட்டும் குற்றத்துக்கு ஈடானது எனும் விதமாக தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளார்.

தற்போது கொரோனா பாதிப்புகளும் இறப்புகளும் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன்மூலம் அழிவை நோக்கி நாம் தள்ளப்படுகிறோம் என்பது நம்பமுடியாத ஒன்று என்று கொந்தளித்திருக்கிறார்.

அத்துடன், "இரண்டாவது அலைக்கு நீங்கள்தான் பொறுப்பு... சீனா அல்ல" என்று மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் அவர் சாடியுள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">GoI and ECI - this is for you <a href="https://t.co/53iI0Uf4Tb">pic.twitter.com/53iI0Uf4Tb</a></p>&mdash; Mahua Moitra (@MahuaMoitra) <a href="https://twitter.com/MahuaMoitra/status/1382751832498438155?ref_src=twsrc%5Etfw">April 15, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதற்கிடையே, தனிமனித இடைவெளி மற்றும் கொரோனா விதிமுறைகள் குறித்து விவாதிக்க மேற்கு வங்கத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ஆரிஸ் அப்தாப் இன்று அனைத்து தரப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே மாநிலத் தேர்தலின் மீதமுள்ள கட்டங்களுக்கு பிரசாரம் செய்வதற்காக எந்தவொரு பெரிய பேரணிகளையும் ஏற்பாடு செய்ய போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக வீட்டுக்கு வீடு வீடாக பிரசாரம் மற்றும் சிறிய குழுவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் முடிவெடுத்துள்ளது.

முன்னதாக, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மாநிலத்தில் மீண்டும் எழுச்சி பெறுவதைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வது தொடர்பாக சுகாதாரம் தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் கண்டிப்பான முறையில் பராமரிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6,769 ஆக அதிகரித்துள்ள நிலையில், வைரஸ் தொற்று பாதிப்புகளை கருத்தில் கொண்டு மீதமுள்ள நான்கு கட்ட வாக்குப்பதிவையும் ஒரே நாளில் நடத்தவேண்டும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருவதும் கவனத்துக்குரியது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்