Published : 10,Apr 2021 10:56 AM
காலமானார் 10 ரூபாய் டாக்டர் கோபாலன்.. துயரத்தில் வடசென்னை மக்கள்!

10 ரூபாய் டாக்டர் கோபாலன் என்ற பெயர், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மிகப் பிரபலம். சுமார் அரைநூற்றாண்டு காலம் மருத்துவ சேவை வழங்கி, இதுநாள் வரை எளிய மக்களை அரவணைத்து வந்த கோபாலனின் மறைவால், அப்பகுதியே துயரத்தில் மூழ்கியிருக்கிறது.
பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பாலமுதலி தெருவில் இருக்கிறது, இவரின் கிளினிக். வடசென்னை மக்களின் வலிகளைப் போக்கும் நிவாரண முகாமாக திகழ்ந்தவர். வெறும் 10 ரூபாயை மட்டுமே கட்டணமாகப் பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார், டாக்டர் கோபாலன். நோயாளிகளிடம் பணம் இல்லை என்றால், அந்த சொற்ப கட்டணத்தைக் கூட அவர் வசூலித்தது இல்லை. மருந்து, மாத்திரைக்கு பணம் இல்லையா? அவற்றையும் தனது சொந்த செலவில் கொடுத்து வாங்கித் தந்து விடுவார் என்கிறார்கள், அப்பகுதி மக்கள். 76 வயதான கோபாலன் சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். ஒரு உயிர் பிரிந்ததற்காக ஊரோ துயரத்தில் இருப்பதை, கோபாலனுக்காக கண்ணீர் சிந்தும் ஒவ்வொருவரின் குரலில் இருந்தும் உணர முடிகிறது.
10 ரூபாய் டாக்டர் கோபாலனுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தான் பூர்வீகம். சிறு வயதிலேயே பழைய வண்ணாரப்பேட்டைக்கு குடிபெயர்ந்துவிட்டது, அவரின் குடும்பம். சென்னையில் பள்ளிப்படிப்பையும், தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துப்படிப்பையும் நிறைவு செய்த இவர், பின்னர் முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணரானார்.
ராஜீவ் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த அவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் பொறுப்பு முதல்வர் உள்ளிட்ட முக்கிய பதவிகளையும் வகித்தவர். கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்ட நிலையிலும், இவர் வழக்கம்போல் மக்களுக்கு மருத்துவம் பார்த்த கதைகளைக் கூறி மெய் சிலிர்க்கிறார்கள், பழைய வண்ணாரப்பேட்டை மக்கள்.
10 ஆண்டுகளுக்கு முன் மனைவி உயிரிழந்துவிட்ட நிலையில், பிள்ளைகள் இன்றி ஒன்றை ஆளாய் வாழ்ந்து வந்த கோபாலனின் இறுதிச் சடங்கில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது. மனைவியோ, பிள்ளைகளோ இல்லை என்றால் என்ன? உண்மையான அன்போடு ஊருக்கு சேவையாற்றிய மருத்துவருக்கு, ஊர்கார்களே உறவுக்காரர்களாகிவிட்டனர். ஆம், அந்த ஒற்றை மனிதரின் இறுதிச்சடங்கை, சாதி மத பேதமின்றி பழைய வண்ணாரப்பேட்டை மக்களே முன்னின்று நடத்தியிருப்பதுதான், அன்பின் உச்சம்.