Published : 16,Feb 2021 08:39 AM
பிப்ரவரியை குறி வைக்கும் விஞ்ஞானிகள்: செவ்வாய் கிரகத்தை நோக்கி படையெடுக்கும் விண்கலங்கள்!

அமெரிக்காவின் நாசா அனுப்பிய ஆய்வு ஊர்தி செவ்வாய் கிரகத்தில் நாளை மறுநாள் தரையிறங்க உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் செவ்வாய் கிரகத்தை அடையும் மூன்றாவது விண்கலமாக இது அமைந்துள்ளது.
பூமிக்கு அப்பால் மனித உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்ற கேள்விக்கு விடை தேடி பல்வேறு நாடுகளும் தங்களின் விண்வெளி ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அப்படி பெரும்பாலான நாடுகள் ஆர்வம் காட்டுவது சிவப்பு கோளான செவ்வாய் கிரகத்தில் தான். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் மட்டும் மூன்று நாடுகள் செவ்வாய்கிரகத்தை நோக்கி தங்களின் விண்கலங்களை செலுத்தின. அவை அனைத்துமே பிப்ரவரியில் செவ்வாயை அடைந்திருப்பது தான் சிறப்பு. அதாவது பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்குமான இடைவெளி இந்த மாதத்தில் குறைவாக இருக்கும் என்பதை கணக்கிட்டு பிப்ரவரி மாதத்தில் செவ்வாயை அடையும் வகையில் மூன்று நாடுகளும் விண்கலங்களை அனுப்பின. செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இறங்கி இருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் ராக்கெட்டின் உதவியோடு ஹோப் விண்கலத்தை செலுத்தியது. இந்த விண்கலம் திட்டமிட்டப்படி கடந்த 9ஆம் தேதி செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாயின் வானிலை பற்றிய தகவல்களை ஹோப் விண்கலம் சேகரிக்க இருக்கிறது.
அடுத்ததாக சீனா அனுப்பிய தியான்வென் 1 விண்கலம் கடந்த10ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. அங்கிருந்து வீடியோக்களையும் இது அனுப்பி இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு பின்னர் இதில் இருந்து ரோவர் ஒன்று தனியாக பிரிந்து செவ்வாயில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும். இது வெற்றி அடைந்தால்அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக செவ்வாயில் ரோவரை இறக்கிய நாடு சீனா என்ற பெருமை கிடைக்கும். இந்த விண்கலம் ஓராண்டுக்கு செவ்வாயை சுற்றி வந்து
அங்குள்ள பனியின் படிவுகள் குறித்து ஆய்வு செய்யும். இதுவரை செவ்வாய் கிரகத்துக்கு 4 ரோவர்களை அனுப்பி வெற்றி கண்டுள்ள நாசா , செவ்வாயில் மனித உயிர்கள் வாழ்வது சாத்தியமா என்பதை ஆய்வு செய்வதற்காகவே பிரத்யேகமாக பிரசர்வன்ஸ் என்ற ரோவரை அனுப்பி இருக்கிறது. இந்த ரோவர் வரும் வியாழக்கிழமை செவ்வாயில் சாஃப்ட் லேண்டிங் (SOFT LANDING) முறையில் தரையிறங்க இருக்கிறது. பூமியில் இருந்து 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாயை நெருங்கி இருக்கும் இந்த ரோவர் ஜெசீரோ கிரேட்டர் என்ற 40 கிலோமீட்டர் அகல பள்ளத்தில் தரையிறங்க உள்ளது. கடந்த காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இங்கு கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.
விண்கலத்தில் இருந்து ரோவர் பிரிந்து தரையிறங்கும் அந்த 7 நிமிடங்கள் திக் திக் நிமிடங்களாக இருக்கும் என்கின்றனர் நாசான விஞ்ஞானிகள். பாராசூட் மூலம் மிக கடினமான இடத்தில் ரோவர் இறங்க இருக்கிறது. இந்த ரோவரின் மற்றொரு சிறப்பு இதில் உள்ள 2 கிலோ எடை கொண்ட இஞ்ஜெனியுடி என பெயரிடப்பட்ட ஹெலிகாப்டர். ரோவரில் இருந்து பிரிந்து இந்த ஹெலிகாப்டரை செவ்வாயில் பறக்க செய்வது மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இதை தவிர கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றும் கருவியும் ரோவரில் உள்ளது. இது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டால் எதிர்காலத்தில் மனிதனை அனுப்பி ஆய்வு செய்ய பேருதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது