[X] Close

மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி

Kamal-Hassan-thanks-to-MK-Stalin

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதில் காயத்ரி ரகுராம் பேசிய "சேரி" என்ற வார்த்தை கடும் சர்ச்சையை எழுப்பியது. இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிப்பதுடன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இந்த விவாதங்கள் ஒரு புறம் நடக்க, தமிழக அரசின் அனைத்து மட்டத்திலும் ஊழல் மலிந்து விட்டதாக நடிகர் கமல்ஹாசன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், கமல்ஹாசன் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் என்றும், அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


Advertisement

இதனிடையே நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழக அரசின் ஊழல் குறித்த கமல் கருத்து, தமிழக மக்களின் குரல் என்றும், அதனை அடக்க முயற்சிக்கும் அமைச்சர்கள் இந்த ஆட்சியின் காலம் குறித்து உணர்ந்து தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் தனது நன்றியினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், தற்போது நன்றியை தவிர உடனே ஒன்றும் சொல்ல தோன்றவில்லை என கூறியுள்ளார். தன் ஆதங்கங்களின் பல உங்கள் அறிக்கையில் வெளிப்பட்டுள்ளது தனக்கு பெரிய ஆறுதல் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர்கள் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது எனவும், அது பலிக்கவும் கூடாது எனவும் கமலஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close