[X] Close

வேலை பறிபோயிருமோ... பயத்தில் ஐடி இளைஞர் தற்கொலை!

IT-employee-commits-suicide-in-Pune-over-job-insecurity


புனேவில், ஐ.டி.துறையில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர் தனக்கு வேலை பறிபோய்விடுமோ என்ற பயத்தில் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணா துர்கபிரசாத். 25 வயது என்ஜினியரான இவர், டெல்லி, ஹைதரபாத் உள்ளிட்ட இடங்களில் பிரபல ஐ.டி.நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு புனேவில் உள்ள ஐ.டி.துறையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரது வேலை தொடர்பாக திடீரென கோபி கிருஷ்ணாவிற்கு பயம் ஏற்படவே, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். 
இதையடுத்து, கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தான் தங்கியிருந்த ஓட்டலின் 4வது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரது அறையில் சோதனை மேற்கொண்டபோது, தற்கொலை கடிதம் அவர்களது கையில் சிக்கியது. அந்த கடிதத்தில், ஐ.டி.துறையில் வேலை தொடர்பாக எந்த பாதுகாப்பும் இல்லை. நான் எனது குடும்பத்தை நினைத்து மிகவும் வருந்துகிறேன் என எழுதியிருந்தார். 
ஐ.டி.துறையில் அதிகம் பேர் தற்போது வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்தந்த நிறுவனங்களே வேலை இல்லை என கூறி ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். எனவே, வேலைக்கு பயந்து கோபி கிருஷ்ணாவும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 
 


Advertisement

Advertisement
[X] Close