Published : 09,Nov 2020 09:56 PM

தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடருவேன் - ட்ரம்ப் பிடிவாதம்

I-will-sue-against-the-election-result-Trump

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை சட்டரீதியாக எதிர்க்க ட்ரம்ப் தரப்பு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது என்பதை பார்க்கலாம். 

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. எனினும் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார். சட்டரீதியாக தேர்தல் முடிவுகளை எதிர்க்க ட்ரம்ப் தரப்பு திட்டமிட்டுள்ளது. கிட்டதட்ட 10 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் திருட்டுத்தனமாக பறிக்கப்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டும் ட்ரம்ப் பரப்புரை குழு, பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது. 

image

பென்சில்வேனியா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் கண்காணிப்பாளர்களை 6 அடி இடைவெளியில் நிற்க வைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி 20 அடி தொலைவில் நிற்க வைக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேர்தல் நாளுக்கு பின்னர் வந்த தபால் வாக்குகளை ஏற்பது தொடர்பாகவும் ட்ரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. விஸ்கான்ஸினை பொறுத்தவரை மறுவாக்கு எண்ணிக்கையை கோரவும், நெவேடாவில் மாநிலத்தை விட்டு வெளியேறியவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதை எதிர்த்தும் ட்ரம்ப் தரப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. 

image

தேர்தல் முடிவுகளை எதிர்க்க ட்ரம்ப் தரப்பு முதலில் மாநில நீதிமன்றங்களை நாட வேண்டும். பின்னர் அது மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் செல்லும். அதே வேளையில், தோல்வியை ஏற்கும்படி ட்ரம்பிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் மற்றும் அவரது மருமகனும் ஆலோசகருமான குசினேர் மற்றும் அவரது நெருங்கிய ஆலோசகர்கள் தோல்வியை ஏற்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் ட்ரம்ப் தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாகத் தெரிகிறது.