Published : 07,Nov 2020 11:18 AM
கடலூர்: சிறை கைதி மர்ம மரணம்... நீதி வேண்டி ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்..!

விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைக்கப் பட்டிருந்தவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன், இவர், திருட்டு வழக்கு தொடர்பாக விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்வமுருகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், காவல்துறையினர் அடித்ததால் இறந்ததாகவும் அவரது மனைவி புகார் கூறியுள்ளார். அதற்குக் காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட அவரது உறவினர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே உயிரிழந்த செல்வமுருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, நீதிபதி மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என உறுதி அளித்திருந்தனர். ஆனால் அவர்கள் யாருமின்றி உடற்கூறு ஆய்வு முடித்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால் செல்வமுருகனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் திரும்பிச் சென்றனர். இந்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே #Arrest_Inspector_Arumugam என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. செல்வமுருகனின் உயிரிழப்புக்கு உரிய நீதி வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.