Published : 08,Jul 2017 02:16 PM
இந்தியாவுக்கு தங்கம் - சாதனை படைத்தார் சுதா சிங்

ஆசிய தடகளப்போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டப்பந்தய பைனலில் இந்தியா சார்பில் சுதா சிங், பருல் சவுத்தரி பங்கேற்றனர். இதில் பந்தய துாரத்தை 9 நிமிடம், 59.47 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து சுதா சிங், தங்கம் வென்றார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவர், 2010ல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருந்தார். ஆசிய தடகளத்தில் இவர் வெல்லும் 4வது பதக்கம் இது ஆகும். மற்றொரு இந்திய வீராங்கனை பருல் சவுத்தரி போட்டியில் 5வது இடம் பிடித்தார். இந்த ஆசிய போட்டியில் இந்தியா இதுவரையில் 7 தங்கப்பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.