Published : 17,Aug 2020 08:34 AM
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக ஆன்லைன் மருந்து விற்பனையில் களமிறங்கும் அமேசான்

உலகளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் கோலோச்சி வருகிறது. தனது போட்டியாளர்களை சமாளித்து முன்னணியில் நிற்கும் அமேசான் நிறுவனம் தற்போது ‘அமேசான் பார்மசி’ மூலமாக ஆன்லைன் மருந்து விற்பனையில் நுழைந்துள்ளது.
கடந்த வாரம் பெங்களூருவில் ‘அமேசான் பார்மசி’ சேவையை முதல்கட்டமாக தொடங்கியுள்ளது அந்நிறுவனம். படிப்படியாக இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் அமேசான் பார்மசி சேவை தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் மருந்து விற்பனை சேவைக்கு போட்டியாளராக ஜெஃப் பெஸாஸின் அமேசான் நிறுவனம் இதை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
‘இந்தியாவில் பெருவாரியான மக்கள் ஸ்மார்ட்போன் பயனர்களாக மாறியுள்ளதால் ஆன்லைன் மருந்தகத்திற்கு இந்தியாவில் ஒரு பெரிய சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளதே இதற்கு காரணம். இதனால் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்தி வருகின்றன’ என சொல்கிறார் இந்திய ஆன்லைன் மருந்தக நிறுவனம் ஒன்றின் அதிகாரி ஒருவர்.
மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகளை வழங்கவும், மருத்துவ சாதனங்கள் மற்றும் இந்திய மூலிகை மருந்துகளை ஆனலைனில் வழங்கவும் உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனையில் அமேசானின் என்ட்ரி நாட்டில் உள்ள நேரடி மருந்தகங்கள் மட்டுமல்லாது பார்ம் ஈஸி, மெட் லைஃப் மாதிரியான ஆன்லைன் மருந்துகளை விற்பனை செய்து வரும் நிறுவனங்களையே கலக்கமடைய செய்துள்ளது.