Published : 17,Jun 2020 09:10 AM

இ-பாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் காவல்துறை..! மாவட்ட எல்லைகளில் தவிக்கும் மக்கள்

police-do-not-allowed-the-people-without-epass-in-chennai-border

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிக அளவில் பரவி வருவதால் சென்னையில் இருந்து பொதுமக்கள் வேறுவழியின்றி வேறு மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் உள்ள தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

ஆனால் இபாஸ் இல்லாமல் யாரும் வெளியில் செல்ல அனுமதி கிடையாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் போலீசார் சென்னையை சுற்றிய எல்லைப்புறங்களில் முகாம் அமைத்து சென்னைவாசிகள் வெளியில் செல்லாதவாறு தடுத்து வருகின்றனர். அந்த வகையில் இ பாஸ் எதுவும் இல்லாமல் செங்கல்பட்டு நோக்கி வரும் இருசக்கர வாகனங்களை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். இருசக்கர வாகனங்கள், மற்றும் ஆட்டோ, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு இ பாஸ் உள்ள வாகனங்களை மட்டும் அனுமதிக்கின்றனர். இதனால், பரனூர் சுங்கச் சாவடி பகுதியில் பெரிய அளவில் கூட்டம் காணப்படுகிறது.

image

இதேபோல், இ-பாஸ் இல்லாத வாகனங்கள் தமிழக-ஆந்திர எல்லையில் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள், ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் தமிழக-ஆந்திர எல்லையில் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் உட்பட எல்லைக்குள் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்பே அனுமதிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து செல்லும் வாகனங்கள் பூந்தமல்லியை அடுத்த நசரத் பேட்டை பகுதியிலே சோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய அனுமதி இல்லாதவர்களை திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனிடையே, சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் இருந்து மதுரைக்குள் வருபவர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் மதுரை மாவட்ட எல்லையான பிரான்பட்டி விளக்கு பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில், சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

image

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் உரிய அனுமதி (இ-பாஸ்) இல்லாமல் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருவது அதிகரித்துள்ளதால், உரிய அனுமதி இல்லாத வாகனங்களை மாவட்ட எல்லையில் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. மீண்டும் வட மாவட்டங்களுக்கு செல்லாமல் நெடுஞ்சாலையில் மறுபுறத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால், விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற வாகனங்களுக்கு காவல்துறை தரப்பில் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி இச்சோதனைச்சாவடியில் விபத்து ஏற்பட்டு சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

image

இந்நிலையில், இ பாஸ்க்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்தாலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் என்ன செய்வதென்று தெரியவில்லை எனவும் சென்னைவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். சென்னையில் நாளுக்கு நாள் நோய்தொற்று அதிகரித்து வந்த வண்ணம் இருக்கும் காரணத்தினால் இருசக்கர வாகனத்தில் வேறுவழியின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தங்கள் நிலையை தெரிவிக்கின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்