[X] Close

"257 பேர் பலியான வழக்கு - 24 ஆண்டுகளுக்குபின் தீர்ப்பு"

1993-Mumbai-Blast-TADA-court-gives-judgement-on-seven-accused

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அபு சலீம், முஸ்தபா தோசா உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என மும்பை தடா நீதிமன்றம் 24 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பளித்துள்ளது.


Advertisement

மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு மார்ச் 12–ந் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 அப்பாவிகள் பலியானார்கள். 713 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 100 பேருக்கு, 6 மாதம் முதல் ஆயுள் தண்டனை வரை கடந்த 2007 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் வழங்கியது. இதன் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமன் கடந்த 2015 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

இந்நிலையில், மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான மற்றொரு வழக்கு மும்பையில் உள்ள தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டிருந்த தாதா அபு சலீம், முஸ்தபா தோசா, பிரோஸ்கான், ரியாஸ் சித்திக்கி, கரிமுல்லா ஷாயிக், தாகிர் தக்லியா ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அப்துல் கயூம் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Advertisement

இதில் தாதா தாவூத் இப்ராகிம், அனிஸ் இப்ராஹிம், டைகர் மேமன் உள்ளிட்ட 27 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக போலீசார் அறிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு வழக்கில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்ததற்காக இந்தி நடிகர் சஞ்சய் தத் சிறை தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close