[X] Close

தேர்தல் வியூகத்திற்கு கார்பரேட் நிறுவனம் - திமுகவின் முடிவு காலத்தின் கட்டாயமா?

சிறப்புச் செய்திகள்

DMK-ropes-in-Prashant-Kishor-for-2021-Tamil-Nadu-assembly-polls

திமுகவை பொறுத்தவரை இப்போது சூடு பிடித்துவிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் சட்டசபைத் தேர்தல் பணிகளை கவனிப்பதற்கும் அது குறித்து வியூகம் அமைப்பதற்கும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் அமைப்பினை அமர்த்திருக்கிறார். அதற்கான அறிவிப்பை அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே வெளியாகி உள்ளது. திமுகவின் இந்த அறிவிப்பு தற்போது தமிழக அரசியல் களத்தில் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. ஆகவே பிரசாந்தின் வருகை தமிழக அரசியல் களத்தை எந்தளவுக்கு மாற்றி அமைக்கும் என பலரிடம் கேட்டோம்.


Advertisement

Image result for prashant kishor

இது குறித்து நம்மிடம் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “இன்றைய சூழ்நிலையில் இதை தவிர்க்க முடியாத ஒன்றாகதான் நான் பார்க்கிறேன். ஒரு அரசியல் கட்சிக்கு என்று அவர்களுடைய பலம் நிச்சயமாக இருக்கிறது. ஊராட்சியில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு தெருவிலும் அவர்களுக்கு பலன் என்பது இருக்கிறது. ஆனால் அது கட்சியின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பாகமாகதான் இருக்கிறது. ஆனால் கார்பரேட் கலாசாரம் எங்கே வருகிறது என்றால் அவர்கள், ஒரு கட்சிக்கு எந்த மாதிரியான அணுகுமுறை இந்தத் தேர்தலுக்கு வேண்டும்? என்பதைதான் அறிவுறுத்துவார்கள். அவர்களின் உதவி ஒரு கட்சிக்கு அங்குதான் தேவையாகிறது.


Advertisement

இதை விளக்கமாக சொன்னால், வரும் தேர்தலில் எதிர் அணியில் ஈபிஎஸ் உடன் மோதுவதாக இருந்தால் என்ன மாதிரியான அணுகுமுறையை கையாள வேண்டும்? இதே இடத்தில் ரஜினி இருந்தால் அதை எப்படி அணுகுவது? திமுகவின் பலத்தை வைத்து வேறு என்ன விஷயங்களில் கவனத்தை செலுத்த வேண்டும்? என்பன போன்ற விஷயத்தைதான் பிரஷாந்த் கிஷோர் போன்றவர்களால் ஒரு கட்சிக்கு உதவ முடியும். இதை எல்லாம் கட்சியில் உள்ள அரசியல்வாதிகளால் வகுக்க முடியாது. புள்ளிவிவர ரீதியான அடிப்படை தரவுகளை பிரசாந்த் கிஷோர் போன்றவர்களால்தான் வகுத்து தர முடியும்.

Image result for prashant kishor

இந்த கார்பரேட் கலாசாரம் பல மேலை நாடுகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுதான். இதை கார்பரேட் கலாசாரம் என நான் பார்க்க மாட்டேன். இதை ஒரு professionalism என்றுதான் நான் பார்க்கிறேன். professionalism பாணியில் வேலை செய்து கொடுக்க கூடிய உதவியாளர்களாகதான் பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் வருகிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘குஜராத் மாடல்’ என்ற மிகப்பெரிய மாயையை எப்படி உருவாக்குகிறார்கள் என ஆராய்ந்து பார்த்தால் அது நிச்சயம் பிரஷாந்த் கிஷோர் மாதிரியான ஒரு கார்பரேட் ஆட்களின் வேலையாகதான் இருக்கிறது. இது சரியா? இல்லையா? என்பது குறித்து மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.


Advertisement

‘ஒவ்வொரு மாநிலத்திற்கு என்று தனித்த அடையாளம் உள்ளது. அது சார்ந்த அரசியல் உள்ளது.. ஆனால் திடீரென்று தேர்தலுக்காக முற்றிலும் ஒரு வேறு மாநிலத்தைச் சேர்ந்த பிரஷாந்த் கிஷோர் போன்றவர்களால் உதவிவிட முடியுமா?. ஏனென்றால் தென்னிந்திய அரசியல் என்பது சுதந்திர போராட்டக் காலம் தொடங்கி முற்றிலும் வேறாகவே இருந்து வருகிறது’ என கேட்டதற்கு..

Image result for prashant kishor

“முக்கியமான கேள்வியாகதான் இதை நான் பார்க்கிறேன். ஒரு கட்சிக்கு என்று கொள்கை இருக்கிறது, ஒரு கோட்பாடு இருக்கிறது. அதை எல்லாம் மீறிதான் இவர் செயல்படுவாரா என பார்த்தால் அப்படி இருக்காது. இப்போது பாஜக இந்துக்கள்தான் நம் ஓட்டு வங்கி மற்றவர்கள் இல்லை என்ற ஒரு கருத்தியலுக்கு வருகிறது. அதை பிரசாந்த கிஷோர் கொண்டு வரவில்லை. ஏற்கெனவே கட்சியில் இருக்கிறது. அதை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கிஷோர் சில யூகங்களை வகுக்கிறார் அவ்வளவுதான்.

இவர்களால் ஒரு கட்சியின் தலைவருக்கு ஒரு இமேஜை ஏற்படுத்தி தர முடியும். என்ன பேச வேண்டும்? எந்த நேரத்தில் பேச வேண்டும்? எப்படி பேசினால் மக்களிடம் போய் சேரும் என்பதை எல்லாம் இந்த கார்பரேட் கற்று தருவார்கள். கருத்தியல் அடிப்படையில் இவர்களால் ஒரு கட்சிக்கு உதவ முடியாது. அது கட்சிக்கு உள்ளாக இருந்துதான் வரவேண்டும். இந்த கார்பரேட் ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் இங்குவரப்போவதில்லை. இந்தக் கட்சி எப்படி? இது எதனால் நிலைகொள்கிறது? என்பதை அறிந்து அவர்கள் யூகங்கள் வகுப்பார்கள்”

ஸ்டாலின் இந்த முடிவை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்டதற்கு..

“ஒருவேளை பிரசாந்த் கிஷோர் அதிமுக பக்கமோ அல்லது கமல் பக்கமோ ஏன் ரஜினி பக்கமோகூட போய் இருந்தால் அது திமுகவிற்கு சாதகமாக இருந்திருக்காது இல்லையா? மேற்கு வங்கத்தில் வரப் போகிற சட்டசபைத் தேர்தலுக்குகூட பிரசாந்த் கிஷோரைதான் அழைத்திருக்கிறார்கள். பீகாரில்கூட இவருடைய யுக்தியால்தானே முன்பு ஜெயித்தார்கள். அதிமுக, பிரஷாந்தை அழைத்திருந்தால் அது திமுகவிற்கு ஒரு தொய்வாக அமைந்திருக்கும். நடைமுறைக்கு ஸ்டாலினின் இந்த முடிவை நியாயப்படுத்த முடியும் என்றாலும் கூட, ஒரு பத்திரிகையாளராக என்னைப் பொறுத்தவரை வரவேற்கத்தக்க முடிவாக ஏற்க முடியவில்லை.

Image result for prashant kishor

இதனால் நாளை ஒரு சாமான்யன் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது. நிச்சயம் பிரஷாந்தை அமர்த்த பெருந்தொகை செலவாகும். அப்படியென்றால் நாளை எளிமையாக பணமே இல்லாமல் தேர்தலில் நின்று ஒரு பாலபாரதியோ, மணியோ, பாலனோ வர முடியுமா என சந்தேகம் வருகிறது. ஆகவே வருத்தம் எழுகிறது”என்கிறார்.

இது குறித்து புதிய தலைமுறையின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் சுமந்த் சி ராமன் பேசியபோது, “பிரசாந்த் கிஷோரை நியமிப்பதற்கு திமுகவிற்கு முழு உரிமை இருக்கிறது. அதை யாரும் கேள்வியே கேட்க முடியாது. அவரின் டீம் மிகப்பெரிய டீம். இவர்களிடம் வேலை செய்பவர்கள் எல்லோருமே கார்பரேட் நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் வேலை பார்த்தவர்கள். இவர்கள்தான் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ‘பிரஜா சங்கல்ப யாத்ரா’ பேரணிக்கான திட்டத்தை வகுத்து கொடுத்தார்கள். இங்கே ஏற்கெனவே ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என நடத்தினார் இல்லையா அதை போன்றதுதான் இது.

Image result for prashant kishor

கட்சி ஒரு சர்ச்சைக்குரிய வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தால், உடனே இவர்கள் ‘இவரை நிறுத்தினால் கட்சிக்கு பாதிப்பு’ எனத் தெளிவாக கூறிவிடுவார்கள். எங்கே சர்ச்சை வருகிறது என்றால், இவர்கள்தான் தேர்தல் பரப்புரைகளை நிர்வகிப்பார்கள் என வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமா? ஏனென்றால் இதை போன்ற உதவிகளை ஏற்கெனவே திமுகவிற்கு பலர் செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் யார் என்று வெளிப்படையாக இதுவரை அறித்ததே இல்லை” என்கிறார்.

இது குறித்து கருத்து கூறிய சுபவீ, “திமுகவை அப்படி எல்லாம் யாரும் இயக்க முடியாது. பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு வெறும் தொழில்நுட்ப யுக்திகளோடு மட்டுமே இருக்கப் போகிறது” என்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close