Published : 05,Jun 2017 07:41 AM
சிக்னல் கிடைக்கலை பாஸ்: மரத்தில் ஏறிய மத்திய அமைச்சர்

செல்போனுக்கு சிக்னல் கிடைக்காத காரணத்தால் மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால் சிக்னலுக்காக மரம் ஏறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்திய அரசு டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகேனர் என்ற கிராமத்தில் மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால் பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. ஆனால், ஃபோன் பேச சிக்னல் சரியாக கிடைக்காததால், அமைச்சர் உடனடியாக ஏணி உதவியுடன் அங்கிருந்த மரத்தின் மீது ஏறி பேசினார். மத்திய அமைச்சர் செல்போன் சிக்னலுக்காக மரத்தின் மீது ஏறியதை கிராம மக்கள் அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.