Published : 30,May 2017 04:53 PM

வங்கதேசத்தை சுருட்டிய இந்தியா... 240 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

India-seamers-script-rout-of-Bangladesh

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை பயிற்சிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. பயிற்சிப் போட்டி என்பதால் இரு அணிகளும் 15 வீரர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 77 பந்துகளில் 94 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 80 ரன்களும் விளாசினர். ஷிகர் தவான் 60 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 32 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷ் தரப்பில் ரூபல் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 325 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். இந்திய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய வங்கதேச அணி, 23.5 ஓவர்களில் 84 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் விராத் கோலி, மகேந்திரசிங் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகிய நட்சத்திர வீரர்கள் களமிறங்கவில்லை. இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஜூன் 4ல் நடக்கிறது.  
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்