Published : 23,Nov 2019 03:37 AM

“நிலையான அரசை அமைக்கவே இந்த முடிவு” - பதவி ஏற்புக்குப் பின் அஜித் பவார் 

Ajit-Pawar-taking-oath-as-Deputy-cm

மகாராஷ்டிராவில் நிலையான அரசை அமைக்கவே  நாங்கள்  இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட பின் அஜித் பவார் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து கடந்த ஒரு மாதமாக நிலவிய இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணி ஆட்சியமைப்பது குறித்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இடையே பல்வேறு கட்டங்களாக பேச்சுக்கள் நடந்த நிலையில், மும்பையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

3 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு பின் நேற்று பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக ஏற்பதில் 3 கட்சிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். 

3 கட்சிகளின் சார்பில் மும்பையில் செய்தியாளர் சந்திப்பு நடக்க உள்ளதாகவும் இதில் ஆட்சியமைப்பது தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் சரத் பவார் கூறியிருந்தார். 

இந்நிலையில், இன்று காலை அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி திடீரென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சராக, பாஜவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இன்று காலை பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் துணை முதலமைச்சராக பதவி யேற்றார். 

துணை முதல்வராகப் பதவி பிரமாணம் எடுத்து கொண்ட பின்னர் பேசிய அஜித் பவார், “இன்று வரை எந்த ஒரு கட்சியாலும் அரசை அமைக்க முடியவில்லை. மகாராஷ்டிர மாநிலம் விவசாயிகள் பிரச்னை உட்பட பல பிரச்னைகள் எதிர்கொண்டுள்ளது. ஆகவே நாங்கள் நிலையான அரசை அமைக்க முடிவு செய்தோம்” என்று கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்