
தமிழக அரசின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பெரிய சோரகை பகுதியில் உள்ள கோயிலுக்கு வந்த முதலமைச்சர் பழனிசாமி அங்கிருந்த மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்கு பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுப்படி குறிப்பிட்ட நாளில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்புற வளர்ச்சித் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த குழுவினர், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று மனுக்களை பெறுவார்கள் என தமிழக அரசு கூறியிருந்தது.
மேலும், ஒரு வார காலத்திற்குள் அந்த மனுக்கள் மீது தீர்வு எட்டப்படும் என்றும், அதன் பின் செப்டம்பரில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் கட்டமாக இந்த திட்டத்தை சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.