Published : 09,Jul 2019 07:55 AM
‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - மஞ்சளுடன் விவசாயிகள் மனு

அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அரியலூர் மாவட்டத்தை அறிவிக்க கோரி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அப்போது கையில் மஞ்சள் உடன் வந்த விவசாயிகள், ‘மஞ்சள் பெண்ணிற்கு எவ்வளவு முக்கியமோ..! அதுபோல் விவசாயிகளுக்கு மண் முக்கியம்’ என்றனர். மேலும், தங்கள் மண்ணை மலட்டுத்தன்மை கொண்டதாக மாற்ற விடமாட்டோம் என தெரிவித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.