Published : 28,Jun 2019 08:33 AM
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல் பட்ஜெட்: எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

மத்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் முதன்முறையாக வரும் ஜூலை 5ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில் அவர் எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக ஆட்சியமைத்து சமர்ப்பிக்கும் முதல் பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடுமையான சவால்கள் காத்துள்ளது. குறிப்பாக நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் புள்ளி விவரங்களிலேயே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை கடந்த மக்களவை தேர்தலில் முக்கிய பரப்புரை அம்சங்களில் ஒன்றாகவும் இருந்தது. எனவே வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு காண வேண்டிய நெருக்கடி நிதியமைச்சர் முன் உள்ள பிரதான சவாலாக இருக்கிறது.
மறுபுறம் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதும் அரசிற்கு பெரும் கவலை தரும் விஷயம். வேலைவாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் முடுக்கிவிட அரசு மிகப்பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் நிதிப் பற்றாக்குறை ஏற்கெனவே அதிகரித்து வரும் நிலையில் முதலீடுகளை அதிகரிக்க முடியாத நிலையில் அரசு உள்ளது.
மேலும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தரும் திட்டமும் அரசின் நிதி நெருக்கடியை அதிகரித்துள்ளது. இத்திட்டத்திற்கு மட்டும் இந்தாண்டு 87 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் வறட்சி உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பெரிதும் பாதக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு தாராளமாக செலவிட வேண்டிய நிலையும் அரசுக்கு உள்ளது.
இது தவிர முந்தைய ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பொருளாதர சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய அவசியமும் நிதியமைச்சருக்கு உள்ளது. இப்படி பல தரப்பு நெருக்கடிகளை சமாளித்து அனைத்து தரப்புக்கும் திருப்தி தரும் வகையிலான பட்ஜெட்டை அளிக்கும் சவாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்கொண்டுள்ளார். தனக்கு முன் உள்ள சவால்களை நிதியமைச்சர் எப்படி சமாளிக்க உள்ளார் என்ற கேள்விக்கு ஜூலை 5ம் தேதி விடை தெரிந்துவிடும்.