Published : 02,May 2017 03:09 PM

உயர்நீதிமன்றத்தால் கீழடிக்கு கிடைக்கப்போகும் 1 கோடி ரூபாய்

keezhadi-archaeological-site-got-1-crore

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தார். அபராதத் தொகையை கீழடி அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கத்து.

கீழடி குறித்து பார்ப்போம்:

கீழடி கிராமம் மதுரையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இந்திய தொல்லியல் துறை சார்பாக நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய 5300 க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. அகழாய்வுக்காக 48 சதுர குழிகள் வெட்டப்பட்டு ஆய்வு தொடர்கிறது. சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிபி.300 ஆம் ஆண்டு முதல் கிபி 10ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது.

முத்துமணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், சுடுமண் பொம்மைகள், சில்லுகள், நூல் நூற்கும் தக்ளி, எலும்புக் கருவிகள், இரும்பு வேல் போன்றவை இங்கு கிடைத்துள்ளன. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, மேற்கூரைகள் ஓடுகள் வேயப்பட்டிருந்திருக்கலாம் என்பதையும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் என்பதனையும் இங்குக் கிடைத்துள்ள சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.

வீடுகளில் குளியலறைகள் இருந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது. தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1000 கிலோகிராம் நிறையுடைய மண் ஓடுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன. கீழடியில் 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது. சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது.

இது குறித்து தலைமைத் தொல்லியல் அதிகாரி அமர்நாத் கூறுகையில், “கிபி 300 ஆம் ஆண்டு தொடங்கி கிபி.10 ஆம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. இதைத் பத்திரப்படுத்தி தமிழகத்திலேயே வைக்கத்தான் அரசிடம் இரண்டு ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. எனவே, நாங்கள் அகழ்வாராய்ச்சி செய்தவற்றை, எங்கள் மத்திய அலுவலகத்தில் வைத்துப் பாதுகாப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறினார்.

உயர்நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை தமிழக அரசு கொடுக்கும் பட்சத்தில், கீழடி அகழாய்வுக்கு அது பெரிதும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நகரம் தமிழர்களின் தொன்மையான வரலாற்றை உலகிற்கு எடுத்துரைப்பதாக திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்