Published : 02,May 2019 11:14 AM

‘பசங்க’ 10 ஆண்டு கொண்டாட்டம் : ட்விட்டரில் சிஷ்யனை புகழ்ந்து தள்ளிய சேரன்

pasanga-ten-years-celebration-on-twitter

தமிழில் ‘தரமான சம்பவம்’ என்ற வார்த்தை ட்ரெண்ட்டிங். ஆனால் ‘தரமான திரைப்படம்’ என்பது அதிகம் ட்ரெண்டிங் ஆவதில்லை. அத்திப்பூத்ததை போல ஒரு படம் கிடைத்தால் அது அபூர்வம். அப்படி தமிழ் சினிமாவின் ஒரு அஃமார்க் திரைப்படம் ‘பசங்க’. இந்தப் படத்தில் பல விஷயங்களை ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. ‘யாருயா இந்தப் பாண்டிராஜ் ?’ எனப் பலர் கழுத்தை உயர்த்தி அவரைப் பார்க்க காத்திருந்தனர். 

அடுத்து ஜேம்ஸ் வசந்தன். சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த இவர் இசையமைப்பாளராக உச்சத்திற்கு உயர்ந்து வந்தார். ‘சுப்பிரமணியபுரம்’ மாபெரும் பெற்றிக்குப் பின், ‘பசங்க’ தனித்து அவரை உலகத்திற்குத் அடையாளம் காட்டி இருந்தது. அடுத்தவர், ‘இங்கிட்டு மீனாட்சி அங்கிட்டு யாரு?’ என அம்மாஞ்சியாக காதல் கதை பேசிய விமல். ‘சோபி கண்ணு’ வேகாவை அவ்வளவு சீக்கரம் மறக்க முடியாமல் செய்யும் அளவு இளையராஜா இசையை போட்டு ரசிகர்கள் மனதில் அவரை பதிய வைத்துவிட்டது. இப்படி பல தரமான கதாபாத்திரங்களால் கவனத்தை ஈர்த்தது ‘பசங்க’. 

இந்தப் படத்தில் நடித்த பல பசங்க இன்று தனி ஹீரோவாக வலம் வரும் அளவுக்கு ஆகும் அளவிற்கு ஒரு அடையாள சின்னமாக இருந்தது. இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகளை முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது. 2009ஆம் ஆண்டு இதே மே மாதம் தான் இப்படம் வெளியானது. ‘பசங்க’ பாண்டிராஜ் என்ற கலைஞனுக்கு தமிழ் சினிமாவின் சிறந்தப் படம், சிறந்த திரைக்கதைக்கான திரைப்படம் என இரண்டு தேசிய அங்கீகாரங்களை அள்ளிக் கொடுத்த திரைப்படம். இந்தப் புகழை நம்பிதான் சூர்யாவை வைத்து ‘பசங்க 2’ படத்தை 2015 டிசம்பரில் வெளியிட்டார் பாண்டிராஜ். ஆனால் இந்தப் படம் இவர்கள் இருவரது வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. 

இந்நிலையில்தான் பாண்டிராஜ், ‘பசங்க’ பத்து வருட கொண்டாட்டம் குறித்து ட்விட்டரில் ஒரு செய்தி போட்டார். இவர் இயக்குநர் சேரனிடம் உதவி இயக்குநராக இருந்தவர். அதை பற்றி ஏற்கெனவே, தன் பேட்டி ஒன்றில் “சேரன் சார் கிட்டதான் நான் உதவி இயக்குநராக இருந்தேன். நான் நினைத்த சினிமாவை அவர் எடுத்துக்கிட்டதால அவரோடு இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டு வேலைக்கு சேர்ந்தேன். இப்போது, சினிமாவில் ஒரு லட்சம் பேர் உதவி இயக்குநராக இருப்பாங்க. அதில் குறைந்தபட்சம் 100 பேர்தான் படம் எடுப்பார்கள்” எனக் கூறியிருந்தார். 

இந்த ட்வீட்டை பார்த்த இயக்குநர் சேரன் அவருக்கு அதில், “வாழ்த்துகள் சார்... இன்னும் நெடிய தூரம் பயணிக்க வேண்டும்” எனப் பதில் போட்டார். அதற்கு பாண்டிராஜ், “உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்” என்றார். உடனே சேரன் “நான் உங்களுக்கு எதுவுமே செய்யாத போதும் என் பெயரை சொல்லி இருந்தீங்க... நீங்க மறக்காம இருப்பது உங்க பண்பு.. அதற்கான மரியாதை... அவ்வளவுதான் சார்” என்றார். 

இப்படி ஒரே உணர்ச்சிப்பூர்வமான பதிவாக அது வளர்ந்தது. அதற்கிடையில் பலர் வந்து சேரனின் பெருந்தன்மையை பாராட்டினர். அதற்கு சேரன், “உதவி இயக்குநர்களை தம்பிகள் போலத்தான் நடத்தி இருக்கிறேன். இன்றுகூட ஜெகதீசன் என் உதவி இயக்குனர் அவர் மகளின் நிச்சயதார்த்தத்திற்கு அழைத்தார். இப்போது அவர் வெற்றிமாறன்கூட வேலை செய்தாலும் மறக்காமல் என்னை அழைத்து முக்கியத்துவம் தந்தது பெருமகிழ்வைத் தந்தது. வேறென்ன எதிர்பார்க்கிறோம் அன்பைத்தவிர” என்றார். 

இடையில் புகுந்த இன்னொருவர், “பாண்டிராஜ் சாரின் முதல் படவாய்ப்புக்கான உங்கள் மெனக்கெடலை, அவரே நிறைய பகிர்ந்திருக்கிறார். நல்லவர்கள் நிறைந்ததாக தமிழ் திரையுலகம் இருக்க வேண்டும்” என்றார். அதற்கும் சேரன், “அது அவரின் பெருந்தன்மை.. நான் அவருக்காக ஒன்றுமே செய்ததில்லை. அவர்தான் எனக்கு என் படங்களுக்கு நிறைய வேலை செய்து உதவியிருக்கிறார். அவர் உயர அவரே காரணம். என் படத்தில் வேலை செய்தார் என்பது எனக்கு பெருமை” என்றார். 

இறுதியாக களத்தில் குதித்த பாண்டிராஜ், “சார், பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க நீங்க இமயம் நான் கடுகு நான் கடைக்குட்டி மட்டும் இல்லை கத்துக்குட்டி இன்னும் உங்களிடம் கத்துக் கொண்டிருப்பவன்” எனப் பதில் போட்டார்.  இதையொட்டி சினிமா உலகில் உள்ள ஒரு குருவும் சிஷயனும் மிக உணர்ச்சிகரமாக உரையாடியதை வைத்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்