Published : 01,May 2019 07:56 AM

ஃபோனி புயல் தீவிரம்: தயார் நிலையில் ஒடிசா, தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு!

Odisha-govt-cancels-leaves-of-doctors--health-staff

தீவிரமடைந்துள்ள ஃபோனி புயலை எதிர்கொள்ள, ஒடிசா தயார் நிலையில் உள்ளது. அங்கு தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஃபோனி புயல், கடுமையான புயலாக உருவெடுத்துள்ளது. ஒடிசாவின் புரி நகரிலிருந்து தென்மேற்கே 680 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புயல், 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தப் புயல், நாளை மறுநாள் ஒடிசாவின் கோபால்புர் மற்றும் சந்த்பாலி இடையே கரையை கடக்கும் என்றும், அப்போது, மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுக் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபோனி புயல் காரணமாக, ஒடிசாவின் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலோரங்களில் உள்ள 11 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் இன்று மாலைக்குள் புயல் தாக்கும் பகுதிகளுக்குச் செல்ல இருக்கின்றனர். இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 9 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அங்கு விடுப்பில் சென்றுள்ள டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று மாலைக்குள் பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்