Published : 01,Apr 2019 07:15 AM
தகாத உறவை தட்டிக் கேட்டதால் கொலை செய்யப்பட்ட மூதாட்டி ! மூன்று மாதத்துக்கு பின் பெண் கைது

(கொலை செய்யப்பட்ட லட்சுமி)
ஓமலூர் அருகே வீட்டில் படுத்திருந்த மூதாட்டியை தாக்கி அவரிடமிருந்த ஏழு சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற பெண்ணை மூன்று மாதங்களுக்கு பின்னர் ஓமலூர் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ஊ.மாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலிகடை கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மனைவி லட்சுமி. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி வீட்டின் வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் லட்சுமியை தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்தனர். இதனைத்தொடர்ந்து, அவரது கழுத்தில் இருந்த தாலிக்கொடி, கழுத்து செயின், கம்மல், தோடு உட்பட ஏழு சவரன் தங்க நகையை பறித்து சென்றனர்.
(கைது செய்யப்பட்ட பச்சியம்மாள்)
இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் மூன்று மாதமாக கொலையாளிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ஓமலூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் லட்சுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த செட்டு என்கிற பச்சியம்மாளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் லட்சுமியின் கணவர் சின்னபையனுடன் சேர்ந்து லட்சுமியை கொலை செய்ததாக பச்சியம்மாள் கூறியுள்ளார். மேலும், நடத்திய விசாரணையில் இறந்த லட்சுமியின் கணவர் சின்னப்பையனின் தங்கை மகள் பச்சியம்மாள் என்பது தெரியவந்துள்ளது. பச்சியம்மாளுக்கும் சின்னபையனுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதையறிந்த லட்சுமி இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், இதுகுறித்து கிராம மக்களிடம் கூறுவதாக எச்சரிக்கை விடுத்ததால் அதிர்ச்சியடைந்த பச்சியம்மாள், அருகில் கிடந்த பலகையை எடுத்து லட்சிமியின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரது கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றுள்ளார். இதை பார்த்தும் பார்க்காதது போல சின்னபையன் இருந்துள்ளார். இதையடுத்து இந்த கொலையை செய்த பச்சியம்மாள், கணவர் சின்னபையன் ஆகிய இருவரையும் கைது செய்த ஓமலூர் போலீசார் அவர்களிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து ஓமலூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.