[X] Close

வேலைவாய்ப்பில் பாஜகவின் வாக்குறுதிகள் என்ன?: சொன்னது, செய்தது என்ன?

Employment-generation-Bjp-s-election-manifesto-what-was-said-and-did-

3. வேலைவாய்ப்புகள் 

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த பெண்கள் முன்னேற்றம் குறித்த வாக்குறுதிகளை கடந்த பதிவில் பார்த்தோம். இந்தப் பதிவில் வேலைவாய்ப்பு குறித்து பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன? அவை எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது பற்றி பார்க்கப் போகிறோம். 


Advertisement

முதலில், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் வேலைவாய்ப்பு அலுவலகங்களை வேலை வழங்கும் மையங்களாக மாற்ற போவதாக கூறியது. அதாவது வேலை தேடும் இளைஞர்களையும் வேலை வாய்ப்புகள் உள்ள நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இந்த அமைப்பை மாற்றப் போவதாக கூறியிருந்தது. 

ஆனால் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)வெளியிட்டுள்ள தகவலின்படி பார்த்தால், இந்தியாவில் 2018இல் வேலையின்மை என்பது 3.5%தான் இருக்கும் எனக் கூறியுள்ளது. இந்தப் புள்ளிவிபரம் கடந்த காலங்களை பிரதிபளிப்பதாகவே உள்ளது. ஆக, வேலை வாய்ப்பு அலுவலகமாக இருக்கும் போதும் சரி, வேலை வாய்ப்பளிக்கும் மையங்களாக மாறியபோதும் சரி, வேலையின்மையின் சதவீதம் என்பது ஒரே நிலையில்தான் தெடர்கிறது. 

இரண்டாவதாக, பாஜக தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல திறன் மேம்பாட்டிற்காக ‘திறமை இந்தியா’(SKill India)என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசுவேலை தேடுபவர்களின் திறனை மேம்படுத்தி அவர்களை வேலைக்கு எற்றவர்களாக மாற்றமுற்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த 'இந்தியா திறன் அறிக்கை 2018' (India Skills Report)படி உயர்நிலை கல்வி முடித்து வருபவர்களில் 47 சதவிகிதம் பேர்தான் வேலைக்கு தகுந்தவர்களாக இருக்கின்றனர். அதேபோல, இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 2 கோடி பேருக்கு மட்டுமே திறன் பயிற்சி அளித்துள்ளனர் என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.

மூன்றாவதாக, பாஜக ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதில் முன்னுரிமை தருவதாக தேர்தல் வாக்குறுதிகளில் கூறியது. ஆனால், 2016 ஆம் ஆண்டில் பாஜக அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலைவாய்ப்புகள் குறைந்தது என்றே ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் உலக வங்கியின் தகவலின்படி 2017இல் வேலைவாய்ப்பு சதவிகிதம் 51.9 சதவிகிதமாக குறைந்ததுள்ளது. இந்த அளவிற்கு வேலைவாய்ப்புகள் குறைந்ததற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கையே காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.  
 
இறுதியாக இந்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலையின்மையிற்கான அதிகாரப்பூர்வமான தரவுகளை இதுவரை வெளியிடவில்லை. கடைசியாக, கடந்த 2016 ஆம் ஆண்டு வேலையின்மை குறித்த அதிகாரப்பூர்வமான தரவை வெளியிட்டது. இதனால் இந்திய அரசின் வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்களை மதிப்பிடுவதில் சிக்கல்கள் நிலவுகின்றன எனப் பொருளாதாரம் சார்ந்த வல்லுநர் குழு வாதிடுகிறது.

அது சரி, பாஜகவின் கவனம் வேலைவாய்ப்புகள் பக்கம் திரும்பவே இல்லையா? அப்படி சொல்ல முடியாது. இவர்கள் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை நாம் சேர்த்து பேசுவோம். அவை:

ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் தரவின்படி கடந்த 2016-17இல் மத்திய அரசு 70 லட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக ஒரு விவரம் கிடைத்துள்ளது. அதேபோல, வேலை வாய்ப்பினை உருவாக்க 'முத்ரா' (MUDRA)திட்டம், ‘ஸ்டார்ட்அப் இந்தியா’,‘ஸ்டான்ட்அப்  இந்தியா’(Startup India,Standup India)ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனால் பயனடைந்தவர்களின் சரியான சதவீதம் வெளிப்படையாக இல்லை. 

மத்திய அரசின் 'ஷ்ரம் சுவிதா போர்டல்' (shram suvidha portal)திட்டம் சுயத்தொழில் தொடங்குவதற்கு மிகவும் எளிமையாக உதவும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.‘பிரதமரின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம்’(pradhan mantri rojgar protsahan yojana)மூலம் புதிதாக வேலைக்குச் சேர்பவர்களின் ஊழியர் வருங்கால வைப்புநிதிக்கு செலுத்தவேண்டிய 12% தொகையை அரசே செலுத்த முன்வந்துள்ளது. அதுவும் முதல் மூன்று வருடங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இதனால் புதிய வேலைவாய்ப்புகள் பல உருவாகியுள்ளது என்பது அரசு தரப்பின் வாதம்.  

ஆக, பாஜக அரசு வேலைவாய்ப்பு தொடர்பாக கொடுத்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்ற முயன்றியிருந்தாலும் அவற்றின் விளைவுகள் இன்னும் வேலைவாய்ப்புகளைத் தரவில்லை என்பதே எதிர்கட்சிகள் விவாதித்து வரும் கருப்பொருள். அதற்கு அரசு கொஞ்சம் வெளிப்படையாக அறிக்கையை சமர்ப்பிக்கும் போது உரிய விவரங்கள் வெளிச்சமாக புரிய வரும்.

சரி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

(வெயிட் அண்ட் சி..)


 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close