[X] Close

கடத்தப்பட்ட மோசடி நபர் - ‘ஸ்கெட்ச்’ போட்டு பிடித்த போலீஸ்

Kidnapped-Chennai-Person-rescue-in-Dindigul

சென்னையில் கடத்தப்பட்ட நபரை தனிப்படை காவல்துறையினர் திண்டுக்கல்லில் அதிரடியாய் மீட்டனர்.


Advertisement

சென்னை, திருவான்மியூரில் உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் (48). இவர் பல பேரிடம் வனத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். ஆனால் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பணத்தை பறிகொடுத்தவர்கள், ஆனந்தை காரில் கடத்தி சென்றுள்ளனர். அத்துடன் அவரது இரண்டு மனைவிகளுக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தாங்கள் பணத்தை கொடுத்தால்தான் ஆனந்தை விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த உஷா, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு, ஒரு தனிப்படையினர் திண்டுக்கல் விரைந்தனர். 


Advertisement

இதற்கிடையே கடத்தல்காரர்கள் உஷாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஆனந்தின் காரை அனுப்பி வைப்பதாகவும், அதனை விற்று அதோடு சேர்த்து ரூ.10 லட்சத்தை கொடுக்குமாறும் கூறியுள்ளனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததும், காரை 2 பேரிடம் கொடுத்து சென்னைக்கு அனுப்பியுள்ளனர். கார் சென்னை வண்டலூர் அருகே வந்தபோது, அங்கே காத்திருந்த மற்றொரு தனிப்படை காவல்துறையினர் காரை சுற்றிவளைத்துப் பிடித்தனர். அத்துடன் அதிலிருந்த இரண்டு பேரையும் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திண்டுக்கல்லில் கடத்தி வைக்கப்பட்டிருந்த ஆனந்தை அங்கிருந்த தனிப்படையினர் மீட்டனர். அத்துடன் அங்கிருந்த கடத்தல்காரர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா(32), டேவிட்(33), ஜான்(32), வேங்கைமுத்து (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. 

கடத்தப்பட்ட ஆனந்த் மீது ஏற்கனவே பள்ளிகரணை, கேளம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் மோசடி புகார்கள் உள்ளன. அத்துடன் வனத்துறை அதிகாரி போல போலியாக நடித்து ஏமாற்றி, பல இளைஞர்களை அவர் மோசடி செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக திருவான்மியூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

புகாரின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு கடத்தல்காரர்களை கைது செய்த, தனிப்படையை சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் மகாராஜன், சங்கர் மற்றும் காவலர்கள் ராஜசேகரன், செந்தில்குமார், தேசப்பன், ராஜேஷ் ஆகியோரை காவல்துறை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

(தகவல்கள் : சாந்தக்குமார், தாம்பரம் செய்தியாளர்)


Advertisement

Advertisement
[X] Close