[X] Close

சிரிக்க வைக்கிறாரா சிவகார்த்திகேயன் ‘சீமராஜா’?

seema-raja-movie-review

சிவகார்த்திகேயனின் அதே அஃமார்க் சினிமா இந்த ‘சீமராஜா’. ஒவ்வொரு வசனமும் கூட வரிசையாக முன்பே கேட்டதை போலவேதான் இருக்கிறது. சிவா, தன் காஷ்டியூம் மாற்ற முயற்சித்த அளவுக்கு காட்சிகளையும் கொஞ்சம் மாற்றி நடித்திருக்கலாம். சூரியோடு அவர் வரும் காட்சிகள் எல்லாம் சொல்லி வைத்ததைபோல பழைய சாயலில்தான் தெரிகின்றன. சூரியின் சிக்ஸ்பேக் படத்தை காப்பாற்றும் என்று படக்குழுவினர் நம்பிவிட்டார்கள் போல. அவர் கொஞ்சமும் அலுப்பு இல்லாமல் பழைய காமெடியையே கலந்து நடித்து கொடுத்திருக்கிறார். 

“இந்தச் சிங்கம்பட்டி ஜமீன்ல துரோகத்தாலகூட  ராஜா செத்திருக்கார். முதன்முறையா அவமானத்துல உன் அப்பன் செத்திருக்கான்” என முக்கால்வாசி படத்திற்குப் பிறகு மு.ராமசாமி பேசும் இந்த ஒன்றை வரிதான் மொத்த படத்திற்கான கதைக்களம். ஆனால் அதை சீரியஸாக சொன்னால் சிரித்துவிடுவார்கள் என்பதற்காக முதல் ட்ராக்கை காமெடியாக்கி, இரண்டாவது ட்ராக்கை கொஞ்சம் சீரியஸாக ஓட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம். படத்திற்கு டைட்டில் ‘சீமராஜா’ என்று போட்டாலும் ஒவ்வொரு காட்சியிலும் சிவகார்த்திகேயனின் மொத்தம் படமும் கண்முன்னால் வந்து நிற்பதுதான் கொஞ்சம் நெருடல். 


Advertisement

வழக்கமான காதல் கலந்த காமெடி கதையாக வளர்ந்து இறுதியில் சிங்கம்பட்டி வீரத்தை உசுப்பி பார்த்திருக்கிறார் ‘சீமராஜா’. அதற்காக கொஞ்சம் மாலிக் வரலாறு, கடம்பவேல் ராஜா கதையை கலந்துவிட்டிருக்கிறார்கள். ஆனால் இதற்குப் பின்புலமாக விவசாய பிரச்னை, தமிழ் மண்ணின் வீரம் என வண்டி எங்கெங்கோ தாவி போகிறது. கதையே இல்லாமல் படம் எடுக்கிறார் பொன்ராம் என அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை முழு மூச்சில் உடைப்பதற்காக ஒரு ஜமீன் கதையை அவர் இந்த முறை எடுக்க முடிவு செய்திருப்பார் போல. காமெடியில் பிஹெச்டி செய்ய தெரிந்த பொன்ராமிற்கு கதையோடு ஒரு கதையை எப்படி நகர்த்துவது என்ற கலை இன்னும் கைகூடவில்லை. ஆகவே கலை பல இடங்களில் செம ரகளையாக முடிந்துவிட்டது. 

தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான ஜமீன் கதைதான். ஆனால் இது வாழ்ந்து கொட்ட ஜமீன். சிங்கம்பட்டியின் இளம் ராஜாவாக வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு அப்பா நெப்போலியன். 1952ல் ஜமீன் ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு எப்படி ஒரு ஜமீனின் ஜம்பம் சரிந்து போகிறது என எடுத்துக்காட்டுகிறது ‘சீமராஜா’. அதற்காக ஒரு மார்க்கெட் சண்டை. அந்தச் சந்தையில் கடைபோட்டு பிழைக்கும் சமந்தாவின் அப்பா. கூடவே கம்பு சண்டை தெரிந்த ஆசிரியையாகவும் அவர் சில காட்சிகளில் வலம் வருகிறார். படத்தின் இடையில் கீர்த்தி சுரேஷ் வருவது போல தெரிகிறது. அதற்குள் அவர் கதை முடிந்துவிடுகிறது.

வில்லன் காத்தாடி கண்ணனை எதிர்த்து நிற்கும் சீமராஜா சிவா, இறுதியில் சற்றும் எதிர்பாராமல் அவரது மகளான சமந்தாவை எப்படி கல்யாணம் செய்து கொள்ளப்போகிறார் என மாறுகிறது. ‘ஒரு பெண்ணின் கண்ணீர் ஒரு பெண்ணின் கன்னிங்’ ஒன் லைன் ஸ்டோரியோடு கதைக்குள் வருகிறார் காளீஸ்வரி சிம்ரன். வயசானாலும் அவர் வேகம் இன்னும் குறையவே இல்லை. கேரக்டர் புதுசாக அவருக்கு கிடைத்த அளவுக்கு அவர் எதையும் புதுசாக படத்தில் செய்ய முயற்சிக்கவில்லை. அது பெரிய சறுக்கல். அதேபோல இசையமைப்பாளர் இமான். தனது பழைய ட்யூனையே பஞ்சர் பார்த்து அப்படியே கொடுத்திருக்கிறார். வாய்ஸும் சரி, பல இடங்களில் வரும் நாய்ஸும் சரி ஒரே மாதிரியே ஒலித்திருக்கிறது. 

முதல் பாதி முழுக்க காமெடி படத்தை காப்பாற்ற முயற்சிக்கிறது. பின் பாதியில் வரும் 14ஆம் நூற்றாண்டு கதை படத்தை காப்பாற்ற இறுதி வரை போராடுகிறது. “பல ஆயுதங்களை பார்த்திருக்கிறேன், முதன்முறையாக நம்பிக்கை தூரோகம் என்ற ஆயுதத்தை பார்க்கிறேன்” என சீனியர் சீமராஜா போர்க்களத்தில் பஞ்ச் பேசும்போது நமக்கு எந்தப் படத்தில் உட்கார்ந்திருக்கிறோம் என சந்தேகம் வருகிறது. போர்க்கள காட்சிகளை சிறப்பாக்கிய அளவுக்கு கதையை சீரியஸாக முயற்சித்திருக்கலாம். ஆக மொத்தம் ‘சீமராஜா’ சிரிப்பு ராஜாவும் இல்லை. சீரியஸ் ராஜாவும் இல்லை. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close