[X] Close

அவ்வளவுதானா ஆஸ்திரேலியா ? தோல்வியால் துவண்ட சோகம்

Aussies-slip-to-34-year-rankings-low

ஐந்துமுறை உலகக் கோப்பையை முத்தமிட்ட ஒரு அணி. ஏழுமுறை உலககோப்பை இறுதி போட்டியில் விளையாடிய அணி. நீண்ட நாள் ஒரு நாள் தரவரிசையில் முதல் இடத்தை அலங்கரித்த அணி. கிரிக்கெட்டின் முகமாக பார்க்கப்படும் பிராட்மேன் என்ற ஜாம்பவனை கிரிக்கெட் உலகிற்கு தந்த அணி. உலக அரங்கில் அதிக ஒருநாள் போட்டியில் வென்ற அணி. தொடர்ந்து அதிக தொடர்களை வென்ற அணி, இப்படி ஈடு இணையற்ற பல சாதனைகளை தன் வசம் கொண்டு இருக்கும் ஒரு அணி கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. “ஆஸ்திரேலியா” இந்த பெயர் கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத பெயர். பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலும் தனக்கென தனி அடையாளத்தையே உண்டாக்கிய அணி, தற்போது அப்படியே எதிர்மறையாக இருகிறது. அண்மையில் இங்கிலாந்துடன் நடந்தப் போட்டியில் ஐந்து போட்டியிலும் தோல்வியை தழுவி ஒரு கத்துக்குட்டி அணி விளையாடுவது போல இருப்பதாக பரவலான விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. 

 


Advertisement

ஆஸ்திரேலியா அணியுடன் அடுத்த தொடர் என்றால் அனைத்து அணிகளுமே ஒரு மாதத்திற்கு முன்பே பயிற்சியை ஆரம்பிப்பார்கள். மற்ற அணிகள் காட்டிலும் ஆஸ்திரேலியா என்றால் கூடுதல் முக்கியதுவமும், பயமும், எதிர் அணி வீரர்களிடம் ஒட்டிக்கொள்ளும். இப்படி கிரிக்கெட் வானில் தனக்கான ஆதிக்கத்தை செலுத்திவந்த அணியில், ஸ்டீவ் வாக், பாண்டிங், வார்னே, கில்கிரிஸ்ட், ஹைடன், பிரட் லீ என இன்று நாம் ஜாம்பவான்களாக பார்க்கும் இவர்கள் விளையாடிய காலம் ஆஸ்யின் பொற்காலம்.

உலகக் கோப்பையை மூன்று முறை தொடர்ந்து தன்வசப்படுத்தியது இந்தக் கூட்டணி. எந்த அணியாக இருந்தாலும், அது எவ்வளவு பெரிய ஸ்கோராக இருந்தாலும் கடைசியில் ஆஸ்திரேலியா வெற்றி என்ற செய்தி வந்த காலம் உண்டு. ஆனால் இவர்கள் ஒவ்வொருவராக ஒய்வு அறிவித்தபோது அஸ்திரேலியா அணியின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்துவிட்டதாக பல கிரிக்கெட் ரசிகர்களும், வல்லுனர்களும் கூட கணித்தனர். அவர்களுடைய கணிப்பு அத்தனையும் பொய் என்று உடனே புறம் தள்ளிவிடாதப்படி அடுத்தடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியா அணி சற்று தடுமாறியது. 

ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை... மீண்டும் ஒரு ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் உறுவாகினார்கள். மைக்கல் கிளார்க், மிச்சல் ஜான்சன், வாட்சன், மைக் ஹசி போன்றவர்கள் அடுத்த தலைமுறையின் முகங்களாக மாற தொடங்கினார்கள். மீண்டும் இழந்த தன் ஆதிக்கத்தை மீட்டு எடுத்தது ஆஸ்திரேலியா ! இந்தக் கூட்டணியும் உலககோப்பையை கையில் ஏந்தியது. இவர்களும் ஓய்வு என்று அறிவிக்கும் காலக் கட்டத்தில் ஆஸி அணி இனி பழைய அணியாக இருக்க வாய்ப்பு இல்லை என்றார்கள். அதுவரை அணியில் மிகப் பெரிய அளவில் முக்கியதுவம் பெறாமல் பந்துவீச்சாளராக இருந்த ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் கேப்டன் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். தொடக்க வீரர் வார்னரும் சிறப்பாக விளையாட துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மீண்டும் அதே வேகம், அதே வார்த்தைப் போர், அதே சுறுசுறுப்பு, என பழைய ஆஸி அணியாக விளையாடி வந்தவர்களுக்கு தென்ஆப்பிரிக்கா தொடர் முற்றுபுள்ளி வைத்தது.  

கடந்த சில மாதங்களுக்கு முன் தென்ஆப்பிரிக்கா எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் ஆஸி கிரிக்கெட் அணியில் மிகப் பெரிய புயலைக் கிளப்பியது. இதனால் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட ஆஸி கிரிக்கெட் வாரியம், கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவி பறிக்கபட்டு ஓராண்டு தண்டனையும், பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் தடையும் விதிக்கப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக பயிற்சியாளர் டேரன் லீமான்  தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆஸி கிரிக்கெட்டின் கருப்பு தினம் என்று இந்த விவகாரம் குறித்து முன்னால் வீரர்கள் ஒரு புறம் கருத்து கூற, இனி  ‘ஆஸி அணி மீளாது’  என வழக்கம் போல் அதே வசனம் மீண்டும் ஒளிக்க தொடங்கின. 

                                       

தென்ஆப்பிரிக்கா விமான நிலையத்தில் ஸ்மித் நடத்தப்பட்ட விதத்தையெல்லாம் மனதில் வைத்து அடுத்த வரும் தொடர்களில் ஆஸி. அணி பதிலடி கொடுக்கும் என ஆஸி ரசிகர்கள் நம்பினர். ஸ்மித், வார்னர் என அந்த அணியின் தூண்களாக பார்க்கப்பட்ட வீரர்கள் இல்லாமல் முதன்முறையாக இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடர் அறிவிக்கப்பட்டது. பல சிக்கலுக்கு பின் விளையாடும் தொடர் என்பதாலும், ஆஸி.அணியின் பரம எதிரி அணி என்பதாலும் இந்தத் தொடரை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக அனைத்து போட்டியிலும் தோற்று கடைசியாக நடந்த டி20 போட்டியிலும் இங்கிலாந்திடம் விழுந்து உலக கிரிக்கெட் ரசிகர்களால் பறிதாபமாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அந்த அணி. இது அந்த அணியை பொறுத்தவரை ஒரு தொடர் தோல்வி என்று மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. ஐசிசி புள்ளிபட்டியளில் கடந்த 34 ஆண்டுகள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லால் அந்த அணி கடைசியாக விளையாடிய 15 ஒருநாள் போட்டியில் 13 போட்டியில் தோல்வியை மட்டுமே சந்தித்துயிருக்கிறது. 

இதை பார்க்கும் போது ஆஸி என்ற அணியின் மீது காலம்காலமாக சொல்லப்பட்டது வந்ததுபோல் அந்த அணி மீண்டும் மீண்டு வராதோ என்றே தோன்றுகிறது. ஒரு அணி என்பது ஒரு தனிபட்ட வீரரை மட்டும் சார்ந்தது இல்லை. ஒரு காலக் கட்டத்தில் திறமையான வீரர்கள் விளையாடி வந்தாலும், அடுத்தக்கட்ட வீரர்களை தயார்படுத்த வேண்டியது அந்தந்த அணி நிவாகத்தின் கடமை. அதை ஆஸி அணி செய்ய தவறிவிட்டதாக சில கிரிக்கெட் விமர்சகர்கள் முன் வைக்கிறார்கள். எப்படிபட்ட ஜாம்பவான்களே விளையாடினாலும் ஒரு சில தொடர்களில் தோற்பது என்பது சாதாரணமானது தான். அதில் இருந்து பாடம் கற்று எப்படி மீள்கிறார்கள் என்பதில் தான் ஒரு வீரரின் திறன் அடங்கி இருகிறது. இப்படியான சூழலை ஏற்கெனவே பலமுறை பார்த்துவிட்ட அந்த அணி மீண்டும் கிரிக்கெட் வானில் தன்னுடைய கொடியை பறக்கவிடும் என்று அந்நாட்டு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுமே நம்புகிறார்கள். இந்த நம்பிகையை ஏற்கெனவே பல முறை காப்பாற்றியுள்ள அந்த அணி மீண்டும் காப்பாற்றும் என் நம்புவோம் !

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close