Published : 19,Jun 2018 03:10 PM
விரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெகுவிரைவில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசரிடம், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிற மாநில முதல்வர்களுடன் நெருக்கம் காட்டி வருவதால் அக்கட்சியுடனான கூட்டணி உறவு பாதிக்குமா..? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ஒரு மாநிலக் கட்சியின் செயல் தலைவர் என்ற முறையில், பிற மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்றார். மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்றும் திருநாவுக்கரசர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெகுவிரைவில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்று குறிப்பிட்ட அவர் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்றும் தெரிவித்தார்.