Published : 11,May 2018 12:19 PM

வாரிசு கனவு மட்டும் போதுமா? வளர்க்கவும் தெரிய வேண்டாமா?: பெற்றோர் கவனிக்க...

How-to-care-of-your-Children--Do-know-parents--

குழந்தைகள் பராமரிப்பு என்பது ஒரு கலை. சின்னதாகச் சிதறினாலும் சீரியஸ் விஷயங்கள் உள்ளே நுழைந்துவிடும். பொத்திப் பொத்தி வளர்த்தாலும் பத்திக் கொள்ளும் பிரச்னைகள் என்ன? சொல்கிறார் குழந்தைநல மருத்துவர் பாலசுப்பிரமணியம். 

“குழந்தை பிறந்து முதல் ஆறுமாதம் வரைக்கும் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்னு பல வருஷமாக சொல்லி வருகிறோம். அதற்காக’ தாய்ப்பால் வாரம்’னு கூட தனியாக ஒருநாளையே கொண்டாடி வருகிறோம். இவ்வளவு விழிப்புணர்வை உண்டாக்கினாலும் உலகம் முழுக்கவே நாற்பது சதவீதத்துக்கு கீழாகத்தான் தாய்ப்பாலை கொடுப்பவர்கள் இருக்கிறார்கள் என புள்ளி விபரம் சொல்கிறது. தாய்ப்பால்தான் குழந்தையின் உயிர்நாடி.” ஆரம்பிக்கும் போதே சத்தான செய்தியோடு பேச ஆரம்பிக்கிறார் டாக்டர் பாலசுப்பிரமணியம். 

“தாய்ப்பாலை மறுப்பதற்கு பல சமூகக் காரணங்கள் இருக்கு. சிசேரியன் டெலிவரி செய்து கொள்பவர்கள் அதிகமாக புட்டிப்பாலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அம்மா தாய்ப்பாலை வழங்கி அதில் வெற்றி கண்டிருந்தால் தன் மகளுக்கும் அதையே அறிவுறுத்திக் கொடுக்க வைக்கிறார். அம்மாவே புட்டிப்பால் விரும்பியாக இருந்தால் தன் மகளையும் அப்படியே செய்ய சொல்வார். அறியாமையினால் கூட பலர் தாய்ப்பாலை கொடுப்பதை தவிர்த்து விடுகிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் ஒருசில மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு புட்டிப்பாலை பழக்கப்படுத்திவிடுகிறார்கள். சிலர் தாய்ப்பால் போதவில்லை, ஆகவே குழந்தைக்கு சத்து குறைபாடு வரலாம் என்று முடிவெடுத்து புட்டிப்பால் கொடுக்கிறார்கள். உடல் உபாதையால் தாய்ப்பால் கொடுக்க முடியாதவர்கள் என பார்த்தால் கொஞ்சம் பேர்தான்” என்றவர் உணவுமுறை பற்றி பேச தொடங்கினார்.

“முதல் இரண்டு வருடங்களில் குழந்தைக்கு எந்தளவு சத்தான உணவை கொடுக்கிறோமோ அதை வைத்துதான் அதன் எதிர்காலமே இருக்கிறது. முடிந்தால் இரண்டு வருடங்களுக்கு மேல்கூட தாய்ப்பாலை தரலாம், தப்பில்லை. பலர் தாய்ப்பாலை மட்டுமே கொடுப்பதால்தான் மற்ற உணவுகளை குழந்தை எடுத்து கொள்வதில்லை என தவறாக நினைத்து தாய்ப்பாலை நிறுத்துவார்கள். அப்படி நிறுத்தக் கூடாது. 

ஒரு வயதுக்கு பிறகு குழந்தைக்கு என்று தனியா சமைக்க வேண்டியதே இல்லை. பெரியவர்கள் சாப்பிடுவதைதான் குழந்தைக்கும் கொடுக்க வேண்டும். முதல் ஆறு மாதத்திற்கு பிறகு படிப்படியாக குழந்தையை பொதுவாக உணவு பழக்கத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும். கட்டாயம் ஜங் ஃபுட் ஐட்டங்களை தவிர்க்க வேண்டும். பல உடல் உபாதைகள் இந்த ஜங் ஃபுட்டினால்தான் வருகின்றன. அதேபோல் கடைகளில் கிடைக்கும் எந்த ஹெல்த் ட்ரிங்ஸ்சையும் கொடுக்கவே கூடாது. சத்துபானங்கள் என கிடைக்கும் எதையுமே தவிர்ப்பது நல்லது. 

பொதுவாக பெரியவர்கள் 2 ஆயிரம் கிராம் கலோரியும் 40 கிராம் புரோட்டினையும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வயது குழந்தை இதில் பாதி அளவான ஆயிரம் கிராம் கலோரியையும் 20 கிராம் புரோட்டினையும்  தினமும்  எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் சரியான உணவு முறை. இந்தளவுக்கு குழந்தையை சாப்பிட வைப்பது கஷ்டம். ஆனாலும் கொடுத்துப் பழக்க வேண்டும்” என்கிறார் டாக்டர் பாலசுப்பிரமணியம்.

“ஆறுமாத குழந்தைக்கு சரியான காய்கறிகள், பழ வகைகள் கொடுக்கவில்லை என்றால் இரும்பு சத்து குறைபாடுகள் வரலாம். சைவ உணவு பிரியர்கள் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வரலாம். பால் கொடுப்பது சத்தானது என நினைத்து நிறைய கொடுப்பார்கள். அதனால் குழந்தை எடை கூடும். ஆனால் ரத்த சோகை வரும். அதில் அதிக கவனம் தேவை. எடைக்குறைவு எவ்வளவு ஆபத்தோ அதே அளவுக்கு ஒபிசிடியும் பிரச்னைதான். 

இன்றைய அடல்ட் அதிகம் பாதிக்கப்படுவது ஒபிசிடியால்தான். குழந்தைகளை விளையாட விடுவதில்லை. எக்சர்சைஸ் கிடையாது. பல ஸ்கூல்களில் கிரெளண்ட் வசதியே இல்லை. ஆகையால் பிள்ளைகளுக்கு அதிக உடற்பருமன் வருகிறது. தினமும் அதிக வியர்வை வெளியேறும் அளவுக்கு குழந்தையை விளையாட அனுமதிக்க வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்க அனுமதிக்கக் கூடாது. ஆடி, ஓடினால்தான் பசி வரும். ஜீரணமாகும். 

இன்றைக்கு முறையான உணவு பழக்கம் இல்லாத காரணத்தால் பத்து வயதிலேயே பெண் பிள்ளைகள் பருவநிலையை அடைந்துவிடுகிறார்கள். சிறுவயதிலேயே பருவநிலை அடைவதால் அதிக உடற்பருமனால் பெண் பிள்ளைகள் அவதிப்படுகிறார்கள். சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு கால்ஷியம் கிடைக்கும் ஆனால் வைட்டமின் டி கிடைப்பதில்லை. மீன் உணவில் விட்டமின் டி சத்து அதிகம். அதை சாப்பிடுவது நல்லது. சூர்ய வெயில் சருமத்தில் படாதால் வைட்டமின் டி உற்பத்தியாகும். வீட்டில் ஏசி, பள்ளியில் ஏசி, காரிலும் ஏசி இப்படி வாழ்பவர்களுக்கு டி சத்து பற்றாக்குறை வரலாம்.

ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ப உயரம் இருக்க வேண்டும். எடை இருக்க வேண்டும். அதில் முன்பின் இருந்தால் என்ன பிரச்னை என கவனிக்க வேண்டும். ஜெனிடிக்கலி சிலர் வளர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் இன்றைக்கு உலகம் முழுக்க உள்ள மனிதர்கள் முன்பைவிட அதிக உயரம் வளர்ந்து கொண்டேதான் வருகிறார்கள். குள்ளமான பெற்றோர்களின் பிள்ளை வளராமல் இருப்பார்கள் என சொல்ல முடியாது. ஆகவே அவர்களும் பரிசோதித்துக் கொள்வது நல்லது. பிறந்த குழந்தையை மாதாமாதம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு வயதுக்கு பிறகு ஆறு மதத்திற்கு ஒரு முறை உயரம், எடை அளவை சரி பார்க்க வேண்டும்.” என்ற பாலசுப்பிரமணியத்திடம் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் பிரச்னைகள் என்ன என்று கேட்டோம்.

“முதலில் காய்ச்சல். அடுத்து சளி, இருமல். மூன்றாவது, வாந்தி, பேதி. அதிகப்படியான காய்ச்சல்கள் வைரஸ் மூலம் பரவுகிறது. சாதாரண காய்ச்சல் மூன்று நாளில் குணமாகிவிடும். ப்ளூ ஜூரம் கூட மூன்று நாளில் குணமாகிவிடும். ஜூரம் இருந்தால் கூட குழந்தை நன்றாக விளையாடுகிறது. தூங்குகிறது. சாப்பிடுகிறது, நன்றாக காதுகேட்கிறது என்றால் பயம் தேவையில்லை. 

தாய்ப்பால் சரியாக கொடுக்கும் குழந்தைக்கு வாந்தி பேதியே வருவதில்லை. கை சுத்தம் இல்லாமல் உணவை கொடுப்பது, ஆரோக்கியமற்ற உணவை கொடுப்பதால் இவை வரலாம். பருவநிலை மாறுதல்களால் கூட வாந்தி, பேதி வரலாம். காய்ச்சல், யூரின் சரியாக போகவில்லை, சோர்வாக இருக்கிறது. சரியாக சாப்பாடு எடுக்கவில்லை என்றால் உடனே குழந்தையை மருத்துவரிடம் கொண்டு செல்வது நல்லது.” என அறிவுரை கொடுக்கிறார் பாலசுப்பிரமணியம்.

 
 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்