Published : 17,Apr 2018 12:30 PM

‘என் கூட பேசமாட்டியா அப்ப சாவு’ காதலியை வெட்டிய இளைஞர்!

Chennai-College-Girl-got-Blade-Attack-by-Her-Lover

தன்னுடன் பேசாத காதலியை கல்லூரிக்கு செல்லும் போது வழிமறித்து பிளேடால் வெட்டிய இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியைச் சேர்ந்த மாணவி, எழும்பூரில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார். இவரை அயனாவரம் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கி எலக்ட்ரீசியனாக பணிபுரியும் சாலமன் ராஜா என்பவர் காதலித்துள்ளார். அந்த மாணவியும், இளைஞரை காதலித்துள்ளார். இந்தக் காதல் கதை சுமார் 2 ஆண்டுகள் ஓடிக்கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் இளைஞரின் நடவடிக்கைகள் பிடிக்காததால், கடந்த இரண்டு மாதமாக அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார் மாணவி.

பேசாமல் இருப்பதன் காரணம் என்ன? என மாணவியிடம் அந்த இளைஞர் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பிளவு அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்று ஆத்திரமடைந்த இளைஞர், மாணவியை தாக்கும் எண்ணத்திற்கு வந்துள்ளார். காலையில் வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட மாணவியை, வழியில் மறித்துள்ளார் இளைஞர். பின்னர் ‘ஏன் என்னுடன் பேசாமல் இருக்கிறாய்’ என்று கேட்டுள்ளார். மாணவி பதில் அளிக்கவில்லை. 

ஆத்திரமடைந்த இளைஞர் ‘என்னுடன் பேசமாட்டாயா’ என கத்தியுள்ளார். பின்னர் ‘என் கூட பேசமாட்டியா அப்ப சாவு. நீ இருக்கவே கூடாது’ எனக் கூறி தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து, மாணவியின் கழுத்தை அறுக்க முயன்றுள்ளார். மாணவி அதைத் தடுக்க, பிளேடு கையை கிழித்துள்ளது. மாணவி அலற, பயந்துபோய் அந்த இளைஞர் அங்கிருந்து ஓடியுள்ளார். இதையடுத்து ரத்த காயத்துடன் அந்த மாணவி, அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில், தப்பி ஓடிய இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தப்பிய ஓடிய இளைஞர் அயனாவரத்தில் தங்கி வேலை செய்து வந்தாலும், அவர் பெங்களூரை சேர்ந்தவர் என்பதால், அங்கே சென்றிருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்