[X] Close

ஆசிஃபாவின் உடைகளை பார்த்து கதறிய தாய் - நெஞ்சை சுடும் உண்மைகள்!

Kathua-Asifa-rape-murder-special-story

அசிபாவின் வெகுளியான கண்கள் இந்திய தேசத்தை தூங்கவிடாமல் செய்துள்ளது. அவர் அநியாயமாக சிதைக்கப்பட்டிருக்கிறார்.‘மோடி அரசு தூக்கத்தில் உள்ளது. அதை தட்டி எழுப்ப இந்த நள்ளிரவு பேரணி’என்கிறார் ராகுல். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு இந்தியா கேட் பகுதி வரை போய் அவரது பேரணி முடிந்துள்ளது. பேரணி முடியலாம்; ஆனால் இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறைகள் இன்னும் முடியவில்லை. நமக்குத் தெரிய வந்தது ஒரு நிருபையா. ஒரு ஆசிபா. ஆனால் பெண்கள் மீதான குற்றச்சம்பவங்கள் குவிந்து கொண்டுள்ளன. பாலியல் வன்முறைகள் என்பதை தாண்டி மனரீதியான வன்முறைகள் என பட்டியல் பருத்து வருகிறது. 

பொதுவாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியிடப்படுவதில்லை. ஆனால் அசிபாவுக்கு அதிலும் நியாயம் கிடைக்கவில்லை. இந்தியன் பினல் கோட் செக்சன் 228 ஏ அவ்வாறு படங்களை வெளியிடுவது முற்றாக மறுக்கிறது. ஆனால் அந்தக் குழந்தையின் படம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. மனதை பிசையும் அந்தப் பிஞ்சு முகம் காட்சிக்கு இரையாக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வன்முறை. அப்படிதான் சட்டம் செய்தி சொல்கிறது. ஆனால் அந்த வரையறை அசிபா விசயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. அசிபாவின் தாயார் தன் மகளின் இறுதிச் சடங்கின்போது மகளது உடைகளை கலைத்துப்போட்டு கதறும் காட்சி நெஞ்சத்தை கனமாக்குகிறது. என்ன அநியாயம்? அந்தக் குழந்தைக்கு நேர்ந்தக் கொடுமைக்கு யார் பதில் சொல்வது? என பலரும் சமூக வலைத்தளத்தில் புலம்பி வருகிறார்கள்.


Advertisement

கேரளாவில் சில வீடுகளில் “எங்கள் வீட்டில் பத்து வயது குழந்தை இருக்கிறாள். ஆகவே பாஜக ஆட்கள் யாரும் வாசலை தாண்டி உள்ளே வந்து ஓட்டுக்கேட்க வேண்டாம்” என நோட்டீஸ் ஒட்டி இருக்கிறார்கள். மேலும் ‘பலாத்காரி ஜனதா பார்ட்டி’ என ஹேஷ்டேக் போட்டு செய்தி பரப்பி வருகின்றார்கள். 

நாடு பெண்களுக்கு எதிராகப் போய்க் கொடிருக்கிறது. ஆனால் பாரத பிரதமர் மோடி அரசு விழாக்களில் கலந்துக் கொண்டு ‘பேட்டி பச்சாவ்..பேட்டி படாவோ’என்கிறார். அதாவது பெண் பிள்ளைகளை காப்பாற்றுங்கள், படிக்க வையுங்கள் என்பது அவரது வேண்டுகோளாக உள்ளது. பிரதமர் வைக்கும் வேண்டுகோளை அவரது கட்சி உறுப்பினர்களே கடைப்பிடிக்கிறார்களா எனத் தெரியவில்லை. காஷ்மீரிலுள்ள கத்துவா, உத்தரபிரதேசத்திலுள்ள உன்னாவ் சம்பவங்களை முன் வைத்து எதிர்க்கட்சிகள் இக்கருத்தை வலியுறுத்தி வருகின்றன. ஆசிபா பள்ளிக்கிப்போகவில்லை. குதிரை மேய்க்கப் போய் இருக்கிறார். ஆசிபா படிக்கப் போகும் அளவுக்கு அவரது சமூகம் இன்னும் முன்னேறவில்லை. அடிமட்டத்தில் உள்ள ஒரு பெண்ணிற்கு நீதி கிடைக்குமா என பலரும் பதறிப்போய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிர்பையாவை மறைத்து மறைத்து வைத்து காப்பாற்றியவர்கள் அசிபாவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துவிட்டார்கள். 

நிருபையாவிற்கு நீதி கிடைத்து என ஆசுவாசம் அடைந்த போது அவரது தாயாருக்கு என்ன நடந்தது. கர்நாடகாவில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொள்ள அவர் வருகிறார். அந்நிகழ்ச்சியில் உடன் கலந்துக்கொள்ள வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நிருபையாவின் தாயாரின் அழகை  பொதுமேடையில் வர்ணிக்கிறார். ‘இவரே இப்படி அழகா இருக்கிறாரே.. அவரது மகள் எவ்வளவு அழகாக இருந்திருப்பார்?’என வெளிப்படையாக பேசுகிறார். பொதுமேடையில் ஒரு அதிகாரி தனது மன அழுக்கை காட்டி இருக்கிறார் என பலரும் கண்டித்தனர். இதுதான் சமூகத்தில் நடக்கும் யதார்த்தம்.   

இப்போது இத்தனை போராட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி “நமது மகள்களுக்கு நிச்சயம் நீதிகிடைக்கும். நாகரிகமான சமூதாயம் கொண்ட நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் வெட்க கேடானவை. குற்றவாளிகள் யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள்” என அம்பேத்கர் தேசிய நினைவிடத்தை டெல்லியில் திறந்து வைத்துவிட்டு கூறியிருக்கிறார். அதனை அடுத்து காஷ்மீர் இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜினமா கடித்தை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் கருத்து சொன்னது ஒருபுறம். இன்னொருபுறம் பெரிய சந்தேகம் எழுகிறது. ஜனவரி 10 அன்று காணாமல் போன அசிபாவின் உடலை கண்டெடுத்தது 17ஆம் தேதி. இவ்வளவு இடைவெளியில் ஒரு குடும்பத்தாரின் மனப்போராட்டம் எந்தளவுக்கு இருந்திருக்கும்? சட்டம் அதுவரை ஏன் வேகமாக செயல்படவில்லை? சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பார்கவுன்சிலே உடந்தையாக இருந்ததாக புகார் கிளம்பியுள்ளது. நீதிமன்றமே தானாக முன்வந்து கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

ஜனவரி 10 அன்று அசிபா காணாமல் போகிறார் என்று காவல்நிலையத்தில் புகாரளித்தும் அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மாறாக அசிபாவின் பெற்றோரை நீங்களே தேடுங்கள் என்று அறிவுறுத்தி அனுப்புகிறார்கள். பின்னர் ஒப்புக்கு புகாரை பெற்றுக்கொண்டு பெயரளவில் ஒரு தேடுதலை நடத்தியிருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. எட்டு வயது அசிபா தன் வீட்டு குதிரைகளை நீர் அருந்த அழைத்துச் செல்லும் போது கடத்தப்பட்டிருக்கிறார். காணாமல் போன அசிபாவின் உடல் முழுவதும் மனிதப் பற்கள் கடித்ததற்கான தடையங்கள் இருந்துள்ளன. அவரை பலாத்காரம் செய்துவிட்டு சிறுமி மீது கற்கள் வீசி உடலை சிதைத்திருக்கிறார்கள். 

சிறுமியின் தோள்பட்டை எலும்பு, நெஞ்செலும்புகள், கைகள், இடுப்பு எலும்புகள் யாவும் நொறுங்கிய நிலையில் இருந்துள்ளது. அசிபாவை பல நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்து இறுதியில் உடலில் மின்சாரம் பாய்ச்சியிருக்கிறார்கள். என்ன கொடுமை? அசிபா செய்தது என்ன? அவள் பெண்ணாக பிறந்ததா? அதுவும் யாரும் தட்டிக் கேட்க முடியாத ஏழைவீட்டில் பிறந்தா? என பல பெண்ணிய அமைப்புக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தக் கொட்டூர குற்றத்திற்கு பின்னால் இருப்பவர்கள் ஆளும் கட்சியினர். அரசைக் கட்டிக்காப்பாற்றுவதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இறுதியில் வேலியே பயிரை மேய்ந்துவிட்ட கதையாகிவிட்டது என குமுறுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.

உண்மையில் இந்திய ஆய்வு ஒன்று 11மாநிலங்களில் குழந்தைகள் மீதான குற்றங்கள் 50 சதவீதத்திற்கு மேலாக பெருகி வருவதாக குறிப்பிடுகிறது. அப்படியென்றால் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நாம் உருவாக்கி வைத்துள்ள கடுமையான சட்டங்கள் என்ன? இப்படி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது அசிபாவின் மரணம். இது நமது இந்தியாவா? கெளரி லங்கேஷ் பெங்களூருவில் கொலை செய்யப்பட்ட போது ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ஹேஷ் டேக்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ‘திஸ் இஸ் நாட் மை இண்டியா’ என அவர் பதிவிட்டார். அதையே இன்று  பலரும் சமூக வலைத்தளத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.

நடிகை ஆண்ட்ரியா இதே ஹேஷ் டேக்கை பயன்படுத்தி இருக்கிறார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், “ஆசிஃபாவுக்கு நேர்ந்த இந்தச் கொடுமை, ஒரு தந்தையாக, மனிதராக, இந்த நாட்டின் குடிமகனாக என்னை கோவப்படவைக்கிறது. மன்னித்துவிடு ஆசிஃபா... இந்த நாட்டில் நீ வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் நாங்கள் தவறிவிட்டோம். எதிர்காலத்தில் உன்னைப் போன்ற குழந்தைகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும், அவர்களின் நீதிக்காகவும் போராடுவேன். உன்னை மறக்க முடியாது” என்று கண்ணீர் வடித்திருக்கிறார்.  நடிகை எமிஜாக்சன் “அப்பாவி சிறுமி கொடூரமான குறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். பெண் என்பவள் கடவுள்” என குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் எமி சொல்வதைபோல பெண் என்பவள் கோயிலில் மட்டுமே தெய்வமாக இருந்தாள். ஆனால் இப்போது அதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. காஷ்மீர் இந்துக் கோயில் ஒன்றில்தான் அசிபா சிதைக்கப்பட்டிருக்கிறார். கோயில்களில் கூட பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லையா என பற்றி எரிகிறது சமூக வலைத்தளம். 

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி, இவ் வையம் தழைக்குமாம்”என்றான் பாரதி. அந்தப் பாரதியின் பெயரை தாங்கி நிற்கும் ஒரு கட்சியின் பிரமுகர்களே பெண்களுக்கு எதிரான வன்முறையில் இறங்கி இருக்கிறார்கள் என்பது எப்படி புரிந்துக் கொள்வது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close