[X] Close

ஆடுவது சந்தேகம்: ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் காயம்!

Hardik-Pandya--Kedar-jadhav-suffers-injury

ஐபிஎல் முதல் போட்டியில் மும்பையின் ஹர்திக் பாண்ட்யாவும் சிஎஸ்கேவின் கேதர் ஜாதவும் காயமடைந்துள்ளதால் அவர்கள் அடுத்தப் போட்டிகளில் ஆடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. 


Advertisement

பதினோறாவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டாண்டு தடைக்குப் பிறகு களத்திற்கு திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்தது. 


Advertisement

முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களம் இறங்கிய சென்னை அணி முதலில் தடுமாறியது. பிராவோ அதிரடியாக விளையாடி, ரன்களை குவித்தார். 30 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 9 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி ஒரு பந்து மீதமிருக்கும் போது 169 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் மும்பை பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, பிராவோ வீசிய பந்து ஹர்திக் பாண்ட்யாவின் காலில் வேகமாகப் பட்டது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இருந்தும் ஆடிக்கொண்டிருந்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் அவர் இரண்டாவது ரன் எடுக்க ஓடியபோது பிராவோ மீது மோதி கீழே விழுந்தார். இதையடுத்து அவர் காலில் மேலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரால் எழுந்துகொள்ள முடியவில்லை. கைத்தாங்கலாக அவரை அழைத்துச் சென்றனர். 


Advertisement

பின்னர் சிஎஸ்கே பேட்டிங் செய்யும்போது, காயத்துடன் வலியோடு பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் அவர் பெவிலியன் திரும்பினார். அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்தப் போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. 

இதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பேட்டிங் செய்துகொண்டிருந்த போது கேதர் ஜாதவ் காயமடைந்து வெளியேறினார். பின்னர் காயத்துடன் வந்து கடைசி ஓவரில், சிக்சரும் பவுண்டரியும் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். 

இதுபற்றி கேதர் ஜாதவ் கூறும்போது, ’சிஎஸ்கே வெற்றியின் மூலம் மனரீதியாக மகிழ்ச்சியாக இருந்தாலும் உடல்ரீதியாக காயமடைந்திருக்கிறேன். அடுத்த சில வாரங்கள் என்னால் விளையாட முடியாது. இந்தப் போட்டியில் என்னால் ஓட முடியாது என்பதால் சிக்சரும் பவுண்டரியும் விளாச நினைத்தேன். அதே போல செய்தேன்’ என்றார். 


Advertisement

Advertisement
[X] Close