Published : 10,Jan 2018 11:10 AM

அல்வா குறித்து பேரவையில் சுடச்சுட விவாதம்..!

Debate-about-halwa-in-RK-Nagar

அல்வா குறித்து பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே சுவாரஸ்யமான விவாதம் இன்று நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுநர் உரையை மஸ்கோத் அல்வா என்றதை சுட்டிக்காட்டி பேசினார். “மஸ்கோத் அப்படி என்றால் என்ன..? என கூகுளில் தேடி பார்த்தேன். ஆனால் பொருள் கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஆளுநர் உரை தமிழக மக்களுக்கு பயன் பெறும் திட்டங்களை கொண்ட பீமபூஷ்டி அல்வா” என ராஜன் செல்லப்பா பேசினார். இது மதுரையில் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

பின்னர், மஸ்கோத் அல்வா என்றால் என்ன..? என தானும் தேடி பார்த்ததாக அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.  அப்படி என்றால் பாதாம், முந்திரி, பிஸ்தா அடங்கிய உடலுக்கு அனைத்து சத்துகளை வழங்கும் பொருட்களை உள்ளடக்கியதுதான் மஸ்கோத் அல்வா என்று ஜெயக்குமார் குறிப்பிட்டார். மக்களுக்கான நல்லத்திட்டங்களை கொண்ட மிக சிறந்த உரைதான் ஆளுநர் உரை எனவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அதன்பின் விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, ஆர்.கே.நகரில் அல்வா வழங்கியது யார் என்று யோசித்து இருந்த நிலையில் அதை ஆளும் அரசே கிண்டி வழங்கியது தெரியவந்துள்ளதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர் தங்கமணி, ஆர்.கே.நகர் மக்களுக்கு நாங்கள் அல்வா வழங்கவில்லை. அவர்கள்தான் உங்களுக்கு பெரிய அல்வாவை வழங்கி உள்ளனர் என்றார். திருமங்கலத்தில் நீங்கள்தான் அல்வா வழங்க ஆரம்பித்தீர்கள் என்றும் அமைச்சர் தங்கமணி பேசினார். அதற்குப் பதிலளித்த தங்கம் தென்னரசு திருமங்கலத்திற்கு முன்னரே காஞ்சிபுரம் கும்மிடிப்பூண்டியில் அந்த அல்வா தொழில் நுட்பத்தை கண்டறிந்தது நீங்கள்தான் என தெரிவித்தார். இந்த விவாதத்தால் சட்டபேரவை சிறிது நேரம் சிரிப்பலையால் நிரம்பியிருந்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்