Published : 21,Dec 2017 01:19 PM
மாணவனின் உயிரை பறித்த செல்போன் மோகம்

செல்போன் தகராறு காரணமாக 8-ம் வகுப்பு பள்ளி மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வேப்பங்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் பார்த்திபன்-விஜி தம்பதியினர். இவர்களது மகன் சந்தோஷ், பொய்கை அரசு மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சந்தோஷ் படிக்கும் பள்ளியில் சக மாணவர்களிடம் செல்போன் வாங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்போன் வாங்க சந்தோஷ் சக மாணவர்களுடன் லத்தேரி அருகே லப்பை கிருஷ்ணாபுரத்திற்க்கு சென்றுள்ளார். அங்கு செல்போன் 500-ரூபாய் பேரம் பேசப்பட்டதில் மாணவர்களுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில் சக மாணவர்கள் 3 பேர் சந்தோஷை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் பொது மக்கள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த லத்தேரி காவல் துறையினர் லப்பைகிருஷ்ணாபுரம் கானாற்று பகுதியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இருந்த சந்தோஷின் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து லத்தேரி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தோஷை கொலை செய்த 3 மாணவர்களில் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். மற்ற இரு மாணவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செல்போன் மீது கொண்ட மோகத்தால் சந்தோஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.