Published : 14,Dec 2017 05:55 AM
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு

ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை பணப்பட்டுவாடா காரணமாக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தமுறை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வேட்பாளர்களின் பரப்புரைக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி, திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். ஆர்.கே.நகரில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.