Published : 04,Dec 2017 02:08 PM
குமரி மீனவர்கள் பத்திரமாக ஊர் திரும்ப நடவடிக்கை: குஜராத் அரசு உறுதி!

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 600 பேர் சொந்த ஊர் திரும்ப தேவையான உதவிகளை செய்வதாக குஜராத் அரசு உறுதி தெரிவித்துள்ளது.
ஓகி புயலால் பாதிக்கப்பட்டு கடலில் தத்தளிக்கும் கன்னியாகுமரி மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குஜராத் கிர் சோம்நாத் பகுதியில் 600 மீனவர்கள் தவித்துக் கொண்டிருந்த தகவல் புதிய தலைமுறைக்கு கிடைத்தது. புயலால் அடித்துச் செல்லப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் தங்களை, கிர்சோம்நாத் கரையோரம் ஓதுங்க குஜராத் அதிகாரிகள் மறுப்பதாக பிபின் என்ற மீனவர் புதியதலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக கவலையுடன் தெரிவித்தார்.
புதிய தலைமுறை செய்தியால், இதனை அறிந்த வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு, கன்னியாகுமரி ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் உள்ளிட்ட அதிகாரிகள், கிர்சோம்நாத் ஆட்சியர் மற்றும் துறைமுக அதிகாரிகளை தொடர்புகொண்டு தமிழக மீனவர்கள் கரை ஒதுங்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், தமிழக மீனவர்கள் 600 பேரையும் கரை ஒதுங்க அனுமதித்த கிர்சோம்நாத் துறைமுக அதிகாரிகள், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படும் என உறுதியளித்தனர். குஜராத்தில் கரை ஒதுங்கியிருக்கும் 600 தமிழக மீனவர்கள் குறித்த தகவல்களும் முழுமையாக சேகரிக்கப்பட்டு அவர்கள் பத்திரமாக ஊர் திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.