Published : 02,Dec 2017 07:12 AM
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் கைது

கொல்கத்தாவில் பள்ளிச் சிறுமியை 2 பயிற்சி ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஜிடி பிர்லா கல்வி நிலையத்தின் கீழ் செயல்படும் பள்ளியில், 4 வயது சிறுமிக்கு சாக்லேட் தருவதாக கழிவறைக்கு அழைத்துச் சென்று, 2 பயிற்சி ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் பள்ளியில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்புத்தன்மை இல்லை என பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள், தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து பள்ளிக்கு விரைந்த போலீஸார், பெற்றோர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். பேச்சுவார்த்தையின் போது வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியில் சிசிடிவி கேமரா இல்லை என்பதால், நடந்தது குறித்து முழுமையான தகவல் தெரியவில்லை என்றும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். அத்துடன் விரைந்து சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் மற்றும் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்றுக் கூறிய விடிய விடிய பள்ளியின் வாசலிலேயா பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மற்ற பள்ளிகளின் பெற்றோர்களும் பங்கேற்றனர். இதேபள்ளியில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் 6 வயது சிறுமி பள்ளி வாகன ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்களின் போராட்டம் தொடர, அவர்களுடன் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட மேற்கு வங்க எதிர்க்கட்சிகளும் களத்தில் இறங்கினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பார்தா சட்டர்ஜி, இந்த பிரச்னை குறித்து தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே குழந்தைகள் நலவாரியத்துறையினர் பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு சென்று சந்தித்துள்ளனர். இந்த பிரச்னையால் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்ட பிறகு தான் பள்ளி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.