Published : 20,Nov 2017 01:43 AM
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணை

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரிய வழக்கு, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் கடந்த 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தகுதி நீக்கம் தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸிற்கு பதில் அளிக்க போதிய அவகாசம் கொடுக்காமல், ராக்கெட் வேகத்தில் நடவடிக்கை எடுத்திருப்பதாக குறிப்பிட்டார்.
முதல்வர் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், சில வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், அதனை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமைக்குழு நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தடையை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, விசாரணையை 20ஆம் தேதிக்கு அதாவது இன்றைய தினத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களும் தங்களை தகுதி நீக்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கும் பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கொண்டு வந்ததற்காக திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கும் இன்று விசாரிக்கப்பட உள்ளது. இதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பதவியில் நீடிக்க தடை விதிக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ கு.பிச்சாண்டி தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வருகிறது.