Published : 24,Oct 2017 06:56 AM
ரஜினியின் ’2.ஓ’ ஆடியோ வெளியீட்டில் கமல்!

ரஜினிகாந்தின் ’2.ஓ’ ஆடியோ வெளியீட்டில் கமல்ஹாசன் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.
ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘2.ஓ’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, துபாயில் வரும் வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இந்த விழாவுக்காக மட்டும் ரூ.12 கோடியை, லைக்கா செலவு செய்கிறது. இந்நிலையில் இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கமல் தரப்பில் இதுவரை பதில் ஏதும் சொல்லவில்லை. லைக்கா நிறுவனமும் இதை உறுதிப்படுத்தவில்லை. அவர் கலந்துகொள்ளலாம் என தெரிகிறது.
’2.ஓ’ ஆடியோ விழாவுக்கான டிக்கெட்டுகள் துபாயில் விற்றுத் தீர்ந்துவிட்டன. விஐபி டேபிளுக்கான டிக்கெட்டின் விலை ரூ.6 லட்சம். இதில் ஒரு குடும்பம் கலந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சியை ஜீ டிவி நேரலையாக ஒளிபரப்ப இருக்கிறது.