நெல்லை: காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம் விவகாரம் - மாவட்ட எஸ்பி மறுப்பு அறிக்கை
செய்தியாளர்: மருதுபாண்டி
நெல்லையில் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வாக்குமூலம் விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கடந்த 30 ஆம் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வாக்குமூலம் என்ற பெயரில் புகார் மனு ஒன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்ததாகக் கூறி சமூக வலைதளத்தில் பரவி வரும் தகவல் உண்மைக்கு புறம்பானதாகும். இதுகுறித்து கீழ்க்கண்ட மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது.
கடந்த 02.05.2024 அன்று ஜெயக்குமார் தனசிங் மகனான கருத்தையா ஜெஃப்ரின் என்பவர் உவரி காவல் நிலையம் சென்று தனது தந்தையை காணவில்லை என புகார் மனு அளித்ததன் அடிப்படையில் உவரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விசாரணையை துரிதப்படுத்தினார்.
புகாரளிக்க வந்த போது தான் தனது தந்தையின் அறையில் இருந்ததாக குறிப்பிட்டு ஒரு கடிதத்தை ஆஜர் செய்தார். அந்த கடிதத்தில் 30.04.2024 என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதம், அவர் புகாரளித்த போதுதான் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு யாரிடமும் புகார் அளிக்கவில்லை.
விசாரணை தொடர்ந்த போது 04.05.2024 காலை அவரது தோட்டத்தில் எரிந்து நிலையில் சடலமாக கிடந்ததையடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டு வழக்கை துரிதப்படுத்தும் வகையில் அனைத்து அறிவியல் பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.