Published : 12,Feb 2017 12:08 PM
சசிகலாவை முதலமைச்சராக பதவியேற்க அழைப்பதில் என்ன சிக்கல்... அமீர் கேள்வி

தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்பதற்கு உள்ள சிக்கல் குறித்து ஆளுநர் நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமீர், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அமைதி காப்பது தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வருவதற்கா என சந்தேகம் எழுகின்றது என்று கூறினார். சசிகலா தனக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கடிதம் அளித்தும், இதுவரை அவரை ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து தமிழக ஆளுநர் நாளைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். தமிழக முதலமைச்சராக சண்டை போட்டு கொள்ளும் இவர்கள் தேர்தலை சந்திக்க தயாரா எனவும் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். சசிகலாவிற்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் ஏன் அவர்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைவரின் தொலைபேசிகளும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் இது போன்ற நிலை அவமானத்தை ஏற்படுத்துகின்றது என அமீர் தெரிவித்துள்ளார்.
ராஜினாமா செய்ய கோரி கட்டாயப்படுத்தப்பட்டதை பன்னீர்செல்வம் ஏன் தமிழக ஆளுநரிடம் கடிதத்தை கொடுத்த போது இதனை தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். சசிகலா அ.தி.மு.க வின் பொது செயலாளர் ஆவதற்கு , மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் தமிழக முதலமைச்சர் ஆவதற்கு தான் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் எனவும் கூறினார். தற்போதுள்ள தமிழக அரசியல் சூழல் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது . எம்.எல்.ஏக்களுக்கு அரசு விடுதி இருக்கும் போது , தனியார் சொகுசு விடுதியில் இருப்பதற்கான காரணம் என்ன, சாதாரண மக்கள் எம்.எல்.ஏக்களை போன் செய்து கேட்கும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது என்று அமீர் தெரிவித்துள்ளார்.