Published : 04,Mar 2023 09:07 PM
சென்னையில் லேசான நிலநடுக்கம் வந்தாலும் பாதிப்பு கூடுதலாக இருக்குமாம்! காரணம் இதுதான்!

சமீபகாலமாக துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேர்ந்தது. அதனை தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படும் செய்திகளை நம்மால் கேட்க முடிகிறது. சமீபத்தில் நிலநடுக்கம் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், கடந்த வாரங்களில் சென்னையில் நில அதிர்வை உணர்ந்ததாக சில பகுதியில் உள்ள மக்கள் பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால், சென்னையில் நிலநடுக்கம் பதிவானதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் , சென்னையை நிலநடுக்கம் தாக்குமா? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?.... என்பது குறித்து புதிய தலைமுறையில் டிஜிட்டல் பிரிவுக்கு அழகப்பா கல்லூரி புவியமைப்பியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர். ப.உதயகணேசன் அளித்த விளக்கத்தை பின்வருமாறு பார்க்கலாம்..
“பொதுவாக நிலநடுக்கத்தின் அளவை (ஜோன் -1 முற்றிலும் ஆபத்தில்லா பகுதி) ஜோன் 2, (சிறிது ஆபத்தான பகுதி) ஜோன் 3, ( ஆபத்தான பகுதி) ஜோன்4, (அபாயகரமான பகுதி), ஜோன் 5 (மிகவும் அபாயகரமான பகுதி) என் பிரித்து இருக்கிறார்கள். இதில் ஜோன் 3ம் இடத்தில் சென்னையும், கோவையும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம்,
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் 2001 ல் ஏற்பட்ட புஜ் நிலநடுக்கம் தான் காரணம். இந் நிலநடுக்கத்திற்கு பிறகு இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படாத பகுதி என்பது எங்கும் கிடையாது. புஜ்ஜில் வந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகளில் 6.9 ஆக பதிவானது ,இது ஜோன்4 ஐக் குறிக்கும் அபாயகரமான நிலநடுக்கமாகும். இதன் பிறகு தான் இந்தியா நிலநடுக்கப்பட்டியலில், ஜோன்களின் மாற்றத்தை சந்தித்தது. சமீபத்தில் சிரியாவில் வந்த சக்திவாய்ந்த நிலநடுக்கமானது 7.9ஆக பதிவானது (ஜோன் 5). இது மிகவும் அபாயகரமான நிலநடுக்கம். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் சமீபகாலமாக நில அதிர்வுகள் ஆங்காங்கே உணரப்படுகிறது.
பூமியின் அதிக அழுத்தத்தால் பூமிக்கு அடியிலுள்ள டெக்ணோனிக் தகடுகள் அல்லது பிளவுகள் ஒன்றுடன் ஒன்று உராயும்பொழுது, அதன் சக்தி பூமியின் வழியாக வெளியேறுவதாலே பூகம்பங்கள் ஏற்படுகிறது. இந்தியாவை பொருத்தவரையில் புஜ் போன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட அதே இடங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட சுமார் 200 ஆண்டுகள் ஆகும் .
புஜ் நிலநடுக்கத்திற்கு பின் இந்தியாவின் புவியியல்பூகம்ப வரைபடம் திருத்தி அமைக்கப்பட்டது. இதன் படி கோயம்புத்தூரும், சென்னையும் ஜோன் 3 ஆக பதியப்பட்டது. நிலநடுக்கம் ஏற்படாத இடமாக சென்னை இருந்தாலும், கூவம், அடையாறு, பாலாறு போன்ற ஆற்றுபடுக்கையை சென்னை கொண்டிருப்பதால் இதன் மண்ணானது மிகவும் மிருதுவானதாக காணப்படும். அதில் கட்டிடங்கள் கட்டும்பொழுது கட்டிடங்கள் அதிக வலிமையை பெற்றிருக்காது, அதேசமயம் வங்காள விரிகுடா, அந்தமான் போன்ற ( ஜோன்4,5 )அதிக நிலநடுக்கப்பகுதிகள் ஏற்படக்கூடிய இடங்கள் சென்னையை சுற்றி அமைந்திருப்பதால், அப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்கள் சென்னையைத் தாக்கக்கூடும். அதனால் சென்னையை ஜோன் 3 ல் இருக்கிறது.
அதே போல் கோவை பாறைகள் நிறைந்த பகுதி இப்பாறைகளில் வெடிப்புகள் நிறைய காணப்படுவதால், இவ்வெடிப்புகள் உராய்ந்து நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் கோவையையும் ஜோன் 3ல் இருக்கிறது” என்றார்.
ஆகவே மக்களே.... இயற்கையுடன் போராடுவது அவ்வளவு எளிதல்ல... மிருதுவான மண் கடினபடவேண்டுமென்றால் மரங்களை வளர்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. அத்துடன் நிலநடுக்கத்தை தாக்குப்பிடிக்கும் தன்மையுடன் பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டடங்களை கட்ட வேண்டியதும் அவசியமாகிறது. துருக்கி நிலநடுக்க விவகாரத்தில் இந்த விதிமீறல் காரணமாக பாதிப்பின் அளவு அதிகமானதாக விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயஸ்ரீ அனந்த்