Published : 03,Mar 2023 04:54 PM

வனவிலங்கு பாதுகாப்பு தினம்: நம்மை நாமே காத்துக்கொள்ள, இதை இனியாவது செய்வோம்!

Wildlife-Conservation-Day

வனவிலங்கு பாதுகாப்பு தினமான இன்று அதற்கு முக்கியத்துவம் அளிக்க, அழிந்து வரும் விலங்கினங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்

இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானது. இதில் விலங்குகளுக்கும் பங்கு உண்டு. வனங்களுக்கும் பங்கு உண்டு. ஆனால் வனங்களை நாம் சொந்தம் கொண்டாடி அதை அழித்து வருகிறோம். அதனால், வனங்களை சார்ந்து வாழ்ந்து வரும் விலங்குகள் அழிவை சந்தித்து வருகிறது. அழிவென்பது அனைத்து உயிர்களுக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான் என்றாலும், உணவின்றி நீரின்றி விலங்குகள் மடிவது என்பது அபாயகரமான ஒன்று. ஏனெனில் அது இயற்கைக்கு அப்பாற்பட்டது. மனிதர்கள் தங்களின் உணவுக்காகவும் அதன் தோலுக்காகவும் சில நேரங்களில் தன்னுடைய பொழுதுபோக்குக்காகவும் விலங்குகளை அழித்து வருகிறான் என்பதே கசப்பான உண்மை. 

image

பூமி தோன்றிய நாள் முதல் வாழ்ந்த உயிரினங்களில் 90 சதவிகிதம் இன்று உயிருடன் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நூற்றாண்டும் என உயிரினங்கள் தொடர்ந்து அழிந்து கொண்டு தான் வருகின்றன. உலக வனவிலங்கு நிலயத்தின் (WWF)அறிக்கையின்படி, ஐம்பது ஆண்டுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கையானது மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளதாக கூறுகிறது. இத்தகைய நிலைக்கு மனிதர்களாகிய நாம், முக்கிய காரணமாக இருக்கிறோம்.

image

விலங்குகள் உயிரிழப்பு என்பதற்கு இயற்கையின் பேரிடர், எரிமலையின் வெடிப்பு, விண்கற்களின் தாக்கம், மற்றும் கழிவுகள் என ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக இருப்பது மனிதர்கள் காடுகளை அழித்து நகரங்களை உருவாக்குவது தான்.

இதில் நாம் அழிவின் விளிம்பில் இருக்கும் பறவைகளையும் விலங்கினங்களையும் பார்க்கலாம்.

பூமி வெப்பமாதலினாலும், காடுகள் தொடர்ந்து அழிவை சந்தித்து வருவதாலும் பூக்களின் மகரந்த சேர்க்கை இல்லாமல் தேனீக்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறதாம். டெக்னாலஜி வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில், அதிலிருந்து வரும் அதிர்வலைகளின் தாக்கத்தால், சிட்டுக்குருவி, மரங்கொத்தி பறவை போன்றவை அழிவின் விளிம்பில் உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

அதே போல் எண்ணற்ற பறவைகள் தங்களின் இனப்பெருக்கத்தை பெருக்கிக்கொள்ள சதுப்பு நிலத்தைத் தேடி வரும். ஆனால் அது வருடா வருடம் குறைந்து வருவதாக பறவைகள் ஆய்வாளார்கள் கூறுகின்றனர். கடல்களை எடுத்துக்கொண்டால் கடல் ஆமை, தேனீ, துருவ கரடி, டால்பின் என்று எண்ணிலடங்கா நீர் வாழ் உயிரினங்கள் கடலில் கொட்டப்படும் கழிவினால் உயிரிழப்பதாக கூறுகின்றனர்.

image

விலங்குகளின் வகைகளில், ஈரானில் காணப்படும் வேங்கை புலி, சிறுத்தை, வரிப்புலி, சிவப்பு ஓநாய்கள், ஆப்பிரிக்க காட்டு கழுதை என்று கணக்கில் அடங்கா மிருகங்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறது. அதே போல் துருவ பகுதிகளில் வாழும் போலார் கரடி போன்றவையும் அழிவின் விளிம்பில் இருப்பதாக தெரிகிறது.

image

இதேபோல அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் திமிங்கலங்கள், கடல் ஆமைகள் கடல் குதிரைகள் போன்றவையும் அழிவின் விளிம்பில் உள்ளதாம்.

image

கென்யாவில் ஓல் பெஜெட்டா கன்சர்வேன்சியில் எஞ்சியுள்ள உலகில் கடைசி இரண்டு வெள்ளை காண்டாமிருகங்களை வேட்டைக்காரர்களிடமிருந்து பாதுகாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய நிலை தொடர்ந்தால், இன்னும் என்பது வருடங்களில் இப்பொழுது இருக்கின்ற விலங்கினங்களில் பாதிக்கு மேற்பட்ட விலங்கினங்கள் அழிந்து விடும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

image

இந்த புவியில், ஒவ்வொரு உயிரினங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. இதில் ஒரு இனம் அழிந்தாலும் மற்றவை தொடர்ந்து அழியக்கூடிய அபாயம் நிகழும்! ஆகவே... மனிதர்களாகிய நாம் நம் நலனை கருத்தில் கொண்டாவது, பிற உயிரினங்களை அழிக்காமல் வாழ்வது, காலத்தின் கட்டாயம்!

- ஜெயஸ்ரீ அனந்த்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்