Published : 28,Feb 2023 08:19 AM

"மோடி எதிர்ப்பு மனநிலையை நீர்த்துப்போகச் செய்யும் செய்தி அது”- திருமாவளவன் பேட்டி

Thol-Thirumavalavan-speaks-about-Pala-Nedumaran-recent-speech

புதிய தலைமுறையின் ‘அக்னி பரீட்சை’ நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றிருந்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில், முக்கியமான சில கேள்விகள் தொகுப்பாக இங்கே...

“விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ‘உயிரோடு இருக்கிறார், நலமோடு இருக்கிறார்’ என்று பழ.நெடுமாறன் பேசியுள்ளார். இது குறித்து நீங்கள் பேசும்பொழுது ‘இந்திய உளவுத்துறையின் பின்னணி இதில் இருக்கலாம்’ என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இதில் இந்திய உளவுத்துறைக்கும் பழ.நெடுமாறனுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? அவர் உயிரோடு இருப்பதாக சொல்லப்படுவதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?”

“2009 மே 17 பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி உலகம் முழுக்க பரவியது. அந்த நேரத்தில் ராஜபக்‌ச வெளிநாடு சென்று திரும்பியிருந்தார். அப்போது இச்செய்தி கேள்விபட்டதும் மண்ணைத் தொட்டு வணங்குகிறார் அவர்... போர் முடிந்துவிட்டது என்று கேள்விபட்ட பிறகு தான், இந்த செய்கையை அவர் செய்கிறார் என்றுதான் அதை எண்ணத்தோன்றுகிறது. மே 18ம் தேதி, அதிகாரப்பூர்வமாக பிரபாகரன் மறைவை பற்றிய அறிவிப்பு வருகிறது. மே 20-ம் தேதி பழ.நெடுமாறனிடம் மிகுந்த துயரத்தோடு ‘அண்ணனின் நிலை என்ன?’ என நாங்கள் கேட்டோம். அச்சமயத்திலேயே, பழ.நெடுமாறன் அவர்கள் என்னிடம் ‘அவர் நலமோடு இருக்கிறார்’ என்றார். ஆனால் அவரின் கூற்றுக்கு ஆதாரம் இல்லை. அதனால் அவர் உயிருடன் இருப்பதை நான் நம்பவில்லை”

image

“ஆக 2009-லேயே பிறகு பழ.நெடுமாறன் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லியிருக்கிறார். அதன்பின்னும் பலமுறை பிரபாகரன் உயிருடன் இருப்பதை அவர் சொல்லி இருக்கிறார். ஆனால் இப்பொழுது சொல்லும்போது இந்திய உளவு துறை குறித்து உங்களுக்கு ஏன் சந்தேகம் வருகிறது?”

“2009-லிருந்து இதையே தான் அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். புதிதாக அவர் ஏதும் சொல்லவில்லை. ஆனால் இதை இப்பொழுது சொல்வதற்கு காலப்பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை. சர்வதேச சூழல் சிங்களருக்கு ஆதரவாக தான் இப்போது இருக்கிறது, நமக்கு ஆதரவாக இல்லை. உலகத்தில் எந்த நாடும், அங்கு (இலங்கையில்) நடந்தது இனப்படுகொலை என்பதை இப்போதுவரை அங்கீகரிக்கவில்லை.

சொல்லப்போனால் இப்போரில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளது. ஐநா கண்பார்வையில்தான் அந்த இனப்படுகொலையே நடந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம்? அப்படியிருக்க, இந்நேரத்தில் பழ.நெடுமாறன் திரும்ப திரும்ப இதைச்சொல்ல என்ன காரணம்? அதனால் தான் உளவுத்துறையின் மீது சந்தேகம் வலுக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவாளரை, மோடி எதிர்ப்பு நிலையிலிருந்து நீர்த்துப்போகச் செய்வதற்கான ஒரு செய்தி இது”

image

“இலங்கைக்கு தேவையான உதவியை மத்திய அரசு தானே செய்கிறது... பாஜகவிற்கு சகாயம் செய்கிறாரா பழ.நெடுமாறன்? இதில் அவருக்கு கிடைக்கும் சகாயம் என்ன?”

“ஈழத்தமிழருக்கு உதவிசெய்வது போல் காட்டிக்கொள்வதற்காக செய்யப்படும் உதவி இது. அதனால் தமிழ்நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்று, இங்கு கால் ஊன்ற நினைக்கிறார்கள். அதற்காகவே இந்த யுக்தி கையாளப்பட்டு வருகிறது. இதில் பழ.நெடுமாறனுக்கு எந்த சகாயமும் இல்லை. ஆனால் பாஜக-விற்கு தமிழ்நாட்டில் வரவேற்பு தர வேண்டும் என்ற சிந்தனை உதித்துள்ளது”

“அருந்ததியர், தெலுங்கு பேசும் மொழி சிறுபான்மையினர் எல்லாம் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசியது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?”

“அருந்ததியரை வந்தேரி என்று பேசியது வேதனைக்குரியது. மனிதன் என்பவன், அவன் வாழ்க்கையில் புலம் பெயர்ந்து வாழக்கூடியவன். ஆனால் அந்த வகையில் அருந்ததியர் இங்கு வந்து தூய்மைப்பணியாளாராக் இருக்கிறார்கள் என்று பேசியது இனவாதத்தின் உச்சம்” என்றார்.

இதுபோன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் தொல் திருமாவளவன். அவரின் முழு பேட்டியை வீடியோ வடிவில் இங்கு காண்க:

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்